தோழர் சுந்தரத்தின் 40 ஆண்டு அஞ்சலிகள் - Dr Sundaralingam Suresh Surendran
இன்று என் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பர்; எல்லாவித அடக்குமுறைகளையும் உடைத்தெறிய அவருக்கு தோள் கொடுக்க செய்த தோழர்; மனித, தேச, இன, சாதி, வர்க்க சுதந்திரம், சகோதரத்துவத்திற்கு கைகோர்த சகோதரன்; எனது ஊரவன், அயலவன், என் பள்ளியில் படித்தவன், மூத்த வழிகாட்டி; இவற்றுடன் முக்கியமாக "புதியபாதை" பத்திரிகையின் சக ஆசிரியர், சகபத்திரிகை வெளியீட்டாளன்; திரு சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) மிக துக்ககரமாக நாற்பது ஆண்டிகட்கு முன் அமரராககிய நாள். தோழர் சுந்தரத்திற்து எனது அஞ்சலிகள்
எனது அரசியல் இயக்க நுழைவும் தோழர் சுந்தரத்தின் முடிவுடன் என் அரசியல் இயக்க முடிவும்
இன்று என் இயக்க அரசியல் முடிந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. இது என் தோழன் சுந்தரத்தின் முடிவுடன் முடிந்துவிட்டது.
நான் ஏன் இயக்க அரசியலில் இருந்து (தோழர் சுந்தரம் கொலையுண்ட அன்று) விலகினேன்?
எனக்கும், தோழர் சுந்தரத்திற்கும், 'புதியபாதை' பத்திரிகைக்கும் தொடர்பென்ன?
இதற்கும், என் தோழன் சுந்தரத்தின் கொலைக்கும் என்ன சம்பந்தம்?
தியாகி/தோழர் சுந்தரம் யார்?, அவரது சேவை தியாகம் எப்படிப்பட்டது?
அவர் கொலைக்கு நான் நினைக்கும் காரணங்கள் என்ன?
இது போன்ற கேள்விகளிற்கான பதில்களை, வரலாற்று சுவடுகளை புதிதாக இணைந்து கொண்ட தோழர்கள் பலருக்கு தெரியாமலோ, அல்லது தவறாக/திரிபடைந்த விதத்திலோ தெரிந்திருக்கலாம். இவர்களுடன் இன்னும் ஒரு சில பழைய தோழர்களும் 40 வருடம் அல்லது அதற்கு முன்னைய பழைய நினைவுகளை மறந்திருக்கலாம்! ஆகவே ஆதாரங்களுடன் கடந்தகால (1977-1980 தமிழ் புலிகள் காலத்திலிருந்து/ PLOTE தொடங்க முன்பிலிருந்தது, PLOTE தொடங்கிய 1980 உள்ளடங்கலாக 1982 ஜனவரி 2ம் திகதி வரையான காலப்பகுதியில்) நடந்த எனக்கு தெரிந்த சம்பவங்களை நினைவூட்டுவது / திருத்துவது / அறியத்தருவது / ஆவணப்படுத்துவது எனது கடமை என நினைகிறேன். இது இன்றும் உயிருடன் இருக்கும் எல்லா/ ஒருசில ஆரம்பகால இயக்க உறுப்பினரது கடமை.
சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் (1975) என் அரசியல் பயணம் என் விக்ரோறியா கல்லூரி சமூகவிஞ்ஞான ஆசிரியர்களாலும், மணியம் மாமா (திரு கே.ஏ. சுப்பிரமணியம் - அன்றைய சீன சார்பு இடதுசாரிய கட்சி) அவர்களாலும் அறிவூட்டப்பட்டு தொடங்கப்பட்டது. இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால், நாடளாவிய செயல்பாட்டுகளால்; சாதியம், முதலாளித்துவம் முதலியவற்றின் தாக்கங்கள் கிராமிய மாவட்ட மட்டங்களில் அவதானித்ததால், விரக்தியுற்றதால்; என் அயலவர்கள்/ பள்ளியில் மூத்தோர்களான சந்ததி அண்ணை (த. சந்ததியார்), இரவி அண்ணை (ந. இரவீந்திரன்) போன்றோர்களது நெருங்கி நட்பாலும் என் சக பள்ளித் தோழர்கள்/அவர்கள் குடும்பத்தினர்களது (உதாரணமாக, சத்தியராசன் - சத்தியமனை குடும்பதத்தினர்) அன்னியோனத்தாலும் எனது அரசியலறிவு புடம்போடப்பட்டது, என் பங்கேற்பு முன்தள்ளப்பட்டது.
என் அயலவர்கள்/பள்ளியில் மூத்தோன் என்று மட்டுமாக இருந்த மூர்தியண்ணை (சுந்தரம்) அரசியல் தோழன் என்ற முறையில் 1977ம் ஆண்டில் நண்பரானோம். அதேபோல் 1976 இலிருந்து சோதீஸ்வரன் (கண்ணன்) என் பள்ளித் தோழனாக இருந்தாலும், சோதியுடன் மாணவ முதல்வர் தலைவர், சாரணத் தலைவர் முறையில் பழகினாலும் 1977 ம் ஆண்டில்தான் அரசியல் ரீதியில் நண்பரானோம். இந்த 1977-80 இடைப்பட்ட காலகட்டத்தில் பல இளைஞர்கள் (அயலவர் பள்ளியில் மூத்தோன் சிவமண்ணர் (சண்முகம், பாலமோட்டை சிவம்) உட்பட சில ஆரம்பகால தமிழ் இயக்கங்களின்), குறிப்பாக எமது பிரச்சனைகளை தீர்க்க, அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக எம் "ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதங்கள் எந்துவதே மாற்றத்துக்கான வழி மாற்றுவழி ஏதுமில்லை" நம்பியவர்களது அறிமுகங்கள் கிடைத்தன.
சந்ததியார் அண்ணை போன்றோர் காந்தியத்தில் நெருக்கமாக வேலை செய்தாலும், 1978 நவம்பர் கிழக்கு மாகாண புயல் நிவாரணத்தின் போதுதான் காந்தியத்துடன் வேலை செய்ய எனக்கு சந்தர்பம் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் (1977-78) தான் மொழி/சமூகம் (சாதி/வர்கம்) சார்ந்த அடக்கு முறைக்கெதிரான இலங்கை மார்க்சிச லெனினிச மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிலருடன், தோழர் சுந்தரம், தோழர் குணரத்தினம், தோழர் சந்தியார், தோழர் சோதி, என்னுடன் சேர்த்து மற்றும் சிலரும் (தமிழ் புலிகளில் பிரபாகரன் சாராத -பின்நாளில் புளொட் அமைப்பில் இருந்த முக்கிய குழுவினர் சிலரும்) இயக்கத்துக்கு என ஒரு புரட்சிகர (அரசியல் அறிவை கூட்ட/மக்களின் நடத்தையை மாற்ற) பத்திரிகை அவசியம் என்று விரும்பினோம்.
புலிகளில் அன்று இருந்த தோழர்கள் சாந்தன், ஐயர், நாகராஜா, குமணன் போன்றோர்களுடன் என் தோழர்கள் சுந்தரம், கண்ணன், சந்ததியார் என்போருடன் (ஆரம்ப புதிய பாதை குழுவினருடன்) மிக நெருங்கிய தொடர்புடன் ஒன்றாக இருந்ததாலும், அன்றைய அரசியலில்/அரசியல்வாதிகள் மட்டுமன்றி சில இயக்க தோழர்களின் மூலோபாய அரசியல் கொள்கையற்ற குறுகிய, சரவாதிகார, தன்னிச்சையான போக்குகளால் எம் போன்று அவர்களும் விரக்தியடைந்து இருந்ததால், அச்சு ஊடகம் ஊடான கொள்கைப் பிரச்சாரமாகப் பத்திரிகை வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்தது.
இயக்கத்தின் அனைக முக்கிய முற்போக்கு உறுப்பினர்கள் இந்த பத்திரிகை வெளியிட்டு முயற்சி மூலம் மக்கள் தொடர்பு, புரட்சிகர விமர்சன சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு, மூலோப கலந்துரையாடல், கொள்கைப்பரப்பல், தமிழர் விடுதலைக் கூட்டணியின் / தேர்தல் அரசியலின் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கை குறைத்தல், மக்களின் குறிப்பாக இளைஞர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவது, எல்லாவித அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தகூடிய பிரசாரம் முதலியவை செய்ய முடியுமென நம்பினர்கள். எமது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில், மனித/தமிழர் உரிமை, சமூக-அரசியல் புரட்சி சம்பந்தப்பட்ட அரசுக்கு எதிரான பிரசுரங்கள் எதையும் இலங்கையிலுள்ள அச்சகங்களில் யாரும் வெழிப்படையாக அச்சிட்ட முடியாது. அன்று (1970களின் நடு-பிற்பகுதி) குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் கொடிகட்டிப் பறந்ததால், அவர்களுக்கு எதிரான பிரசுரங்களை இரகசியமாகவேனும் யாழ்பாணத்திலிருந்த அச்சகங்களில் யாரும் லேசாக அச்சிட்டுவிட முடியாத ஒரு சூழல். தோழர்கள் சுந்தரம், குணரத்தினம், ஐயர் முதலிய சில முற்போக்கு இடதுசாரிய இயக்க உறுப்பினரின் ஊக்கம்/முயற்சியாலும், எம்முடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிலரால் நிறுவப்பட்ட அச்சகத்தில் (சித்திரா அச்சகம்) அவர்களது கட்சி வெளியீடுகளுடன் அவர்களின் நேச சக்திகளின் எம் வெளியீடான "புதிய பாதையை" அச்சிட முடிந்தது.
புதியபாதையும் சுந்தரமும் (ஆறிமுகம்).
தோழர் சுந்தரத்தின் சரித்திரம், அவரது கொலை என்பவற்றிற்கும் புதியபாதை பத்திரிகைக்கும் ஒரு மிக முக்கிய தொடர்புண்டு.
ஆரம்பகால – 1981 வரை, புதியபாதை (தோழர் சுந்தரம், தோழர் குணரத்தினம், தோழர் சந்தியார், தோழர் சோதி/கண்ணன், மற்றும் சிலர் நான் உட்பட தொடங்கி நடத்திய) பத்திரிகையின் கொள்கை என்ன? எதை மனதில் நிறுத்தி தொடங்கப்பட்டது? என் இந்த பத்திரிகைக்கு அமோக வரவேற்பு பலரிடமும்; கொலை வெறி வரும் அளவுக்கு எதிர்பு சிலரிடமும் இருந்ததிற்கு காரணம் என்ன? சுருக்கமான பதில் புதியபாதை
1) தேர்தல் அரசியலையயும், தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகளையும் நம்பவில்லை. அவர்களை மக்கள் தூக்கி வேண்டுமென்று எழுதியது (Fig 1).
பின்வரும் காகிதக் கப்பல் எனும் கவிதை 1980ம் ஆண்டு புதியபாதை பத்திரிகை வெளிவந்தது (Fig 1). இது புதியபாதையின் அன்றைய மனநிலையை காட்டுகிறது.
"மழை காலம் வந்துவிட்டால் சிறுவர்களால் விடப்படுவதுதான் காகிதக் கப்பல்
தேர்தல் காலம் வந்தபொழுது அரசியல் கிறுக்கர்களால் விடப்பட்டது விடுதலைக் கப்பல் (கூட்டணியின்)
அந்தக் (காகித) கப்பலில் "பயணம்" செய்த இளைஞர்கள் (மாலுமிகள்) இறங்கி விட்டார்கள் நிஜத்திற்கு (கப்பலிற்கு)
கப்பலை செலுத்துவது மாலுமிகள்; வழி நடத்துவதே தலைவன்; இத்தனையும் உண்மையான கப்பலில்
ஆங்கு கப்பலுமில்லை (காகிதக் கப்பல் உண்மையான கப்பலல்ல), மாலுமிகளும் இல்லை, தலைவன்?”
2) முற்போக்கு இடதுசாரி (மாக்ஸிசம்/லேனினிசம்/மாவோயிசம்) கொள்கைகளை கொண்டிருந்தது, தமிழ் தேசிய விடுதலைக்க, சாதி ஒடுக்குமுறை, விவசாயிகள் கைத்தொழிலாளர்கள் உரிமைக்கு அறிவியல் ரீதியான புதியபாதையில் செல்ல முடிவெடுத்தது, (Fig 1) அறிவியல் ரீதியான எல்லா வர்க்க மக்களும் ஒன்றிணைந்த ஒரு புரட்சிகர அமைப்பின் அவசியத்தை உணர்தியது (Fig 2).
"உண்மையான புரட்சிக்காரர்கள் இவ்வாறான சிறு சிறு தொண்டுகளுடன் தம்மை குறுக்கிக் கொள்வதல்ல செய்யவேண்டிய பணி. இவ்விதம் நினைத்து தம்மை எவ்வளவு துரம் வருத்திக் கொண்டாலும் தமிழீழத்துக்குரிய அடப்படையை கூட அடய முடியாது. மிகப் பெரும் புரட்சிச் சக்திகளான தொழிலாள கூலி விவசாயி வர்கத்தினரின் ஆதரவை பெறுவதும் அவர்களை நேராக போராட்டத்துடன் பின்னிபிணைக்கக்கூடிய வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர் கட்சியை உருவாக்கி உதவி செய்வது தான் புரட்சிகாரர்கள் செய்யவேண்டிய முதல் பணி"
3) ஒரு நாடு என்பது என்ன? நம்முன்னுள்ள கடமை என்று வரையறுத்ததுடன், தேர்தல் மாயைகட்கோ, பதவி மோகங்கட்கோ, சுயநல வேட்கைக்கொ இரையாகாது தியாகஉணர்வுடன் கொண்ட இலட்சியத்திற்கு பாடுபடவேன்டுமென அறிவுருத்தயது. புரட்சிகர விடுதலைக் கட்சியினை அமைக்கும் பணியில் தோள் கொடுக்க ஒத்த சிந்தனையுடையோர் இணைவது அவசியம். வாசல் திறந்திருக்கிறது, வாரீர், வாரீர், என அறைகூவல் விடுத்தது (Fig 3).
4) மக்கள் புரட்சிமூலமான கீழ் மட்டத்திலிருந்து வரும் சமூக பொருளாதார விடுதலை வழிவகுக்கும், தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரித்தது. தனிநபர்/குழு சர்வாதிகார, சமூக விரோதிகளுக்கு இடமளிக்கும் மேல் மட்டத்திலிருந்தது வரும் பயங்கரவாதத்தை எதிர்த்து (Fig 4).
மறு பதிவில் மிகுதியை தொடர்வேன்
Dr Sundaralingam Suresh Surendran
(முன்னைய புதியபாதை பத்திரிகை வெளியீட்டாளர்/ஆசிரியர்)
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்