இம்முறை இலங்கைப் பயணம் மிகச்சிறந்த சுவாரசியங்களாலும் கற்றல்களாலும் குடும்பங்களின் ஒன்றுகூடல்களாலும் சில எதிர்பாராத திருப்பங்களாலும் சந்திப்புகளாலும் திகட்டாமல் தித்தித்தது.
நண்பர்கள் குடும்பத்தில் எப்போதும் அங்கத்தவர்கள் தான்.
அவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு அடுப்படிவரை வந்து அடிப்பானை வழித்துண்ணும் அளவுக்கு நெருங்கியவர்கள். என் பயணங்களிலெல்லாம் பங்கெடுத்துக்கொள்ளும் பலரில் இவர்கள் அடக்கம்.
புலம் பெயர் வாழ்வின் புதிய அனுபவம் தேடிய பயணங்களில் பொதியிறக்கி இளைப்பாற இடம் தந்த பலரில் என் எண்ணப்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் ஒத்தபடி ஒருவர் எனக்கு அறிமுகமாகிறார்..
இற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரம்மியம் நிறைந்த பச்சைப் பசேல் பள்ளத்தாக்குகளினூடு குளிர்கலந்த காற்றைத் கிழித்தபடி உறுமிச்சென்றது என் ராசா - ஆம் என் ராசா தான், அவனிடம் தங்கமில்லை வைர வைடூரியங்கள் இல்லை ஆனால் என்னோடு ஓடியுழைக்கும் வைராக்கியமும் வலிமையும் இருந்தது.
ஆம் ராசாவேதான் - எனக்கு உறவினர் தந்த ஓர் கார்.
என் முற்பாதி அலைச்சல்களில் அயராது துணைநின்றவன் ராசா. எனது முதல் கார்!
அவன் தான் உறுமிச்செல்கிறான் குளிர்கலந்த காற்றைக்கிழித்த படி!
இருள் கவ்வத் தொடங்கி இருமணிநேரம் கடந்தபின் இயக்கம் நிறுத்தப்படுகிறது ..
டொக் டொக் ...
வாங்கோ .. நீங்கள் தான் பகீரதனா ...
மதி கதைச்சவர் ..
ஓம் கீர்த்தி அண்ணா .. எனக்கு அவர் மாமா முறை. இப்பிடி இஞ்சாலை இடம் மாறப்போறன் எண்டு சொன்னதால உங்களைச் சந்திக்கச் சொன்னவர்.
தத்தளித்த ஓடத்தின் துடுப்பைச் சரிபார்த்த மனிதர் கீர்த்தி அண்ணா.
அன்று அவரைச் சந்தித்த நிகழ்வு பல திருப்பங்களை உருவாக்கிய நிகழ்வுகளின் தொடக்கப் புள்ளி.
நீங்கள் நல்ல வேலையொண்டு கிடைக்கும் வரை இங்கையே தங்கலாம். எனக்கும் பம்பலா பொழுது போகும்.
நன்றி ..
சரி குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம்.
சாப்பாட்டு மேசையில் தொடங்கிய ஆழமான உரையாடல்கள் எம் இருவரையும் இன்னும் பல படி நெருங்க வைத்தது.
மின்னியல், ஊடகம், சுதந்திரம், உலகம் என பரந்து படர்ந்தது பல சுவையான உரையாடல்கள்.
சமையல், புல்லுவெட்டுதல் , கூரைக்கு மேல் குப்பை பொறுக்குதல் என எல்லா வேலைகளிலும் இருசோடி கரங்கள் இணைந்து கருமமாற்றின. நட்பும் நெருக்கமானது.
அங்கேதான் தான் நான் அம்மம்மா என்றழைக்கும் மதிப்புக்குரிய வள்ளியம்மை சுப்பிரமணியம் அறிமுகமாகிறார் - தொலைத்தொடர்பின் பரிணாம வளர்ச்சி எமை இறுக இணைத்து விடுகிறது.
கீர்த்தியண்ணாவுடன் கதைக்கும்பொழுதுகளில் என்னோடும் கதைத்துத்தான் நிறைவுறும் உரையாடல்கள்.
நேரில் பார்த்துவிட வேண்டும்!
அளவளாவி அவாத்தீர்க வேண்டும், அவா வளர்க வேண்டும். ஆளுமையையும் அசராத துணிச்சலையும் ஆறாத இடரிலும் இரும்பு இருதயத்தோடு இத்தனை கனவுகளை நிஜமாக்கி தனக்கின்றி மற்றோர்க்கு மனமுவந்து கொடையளிக்கும் இந்த அம்மம்மாவைப் பார்க்கவே வேண்டும்.
கங்கணம் கட்டிக்கொண்டேன்!
"கற்க கசடற" கற்கவைத்தது, கதைக்க வைத்தது, கனவைல்லாம் கண்முன்னே நிஜமாக்கி விரியவைத்தது!
கீர்த்தி அண்ணா ...இண்டைக்குப் பின்னேரம் அம்மம்மாவைப் பாக்கப் போறேன்..
ஓ.. சந்தோசப்படுவா ..
நம்பர் இருக்குத்தானே?
ஓம் ..
சரி ..என்னத்துக்கும் ஒருக்கா சும்மா கோல் பண்ணிச் சொல்லி விடுங்கோவன்.
அவா வீட்டதான் நிப்பா எண்டாலும் ஒருக்கா சொல்லுறது நல்லது தானே..
பிரச்சினை இல்லை இப்பவே சொல்லிவிடுறன் ...
இரண்டு மாடி நூலகம்!
எத்தனை அருமையான புத்தகங்கள் ..
இன்னமும் பலர் பங்களிப்புச் செய்கிறார்கள் .. பெட்டி பெட்டியாக புத்தகங்கள் ...
எல்லா நிரல் நிரைகளினூடும் இந்த எறும்பு ஊர்ந்து பார்கிறது ...
தொல்காப்பியம் ... நிற்க வைத்தது முதலில் ..
அடுத்தடுத்து பல நூல்கள் ..கைக்குள் அடக்கமுடியாத பருமன் ...
நெஞ்சில் அடக்க முடியாத ஆனந்தம்
முகத்தில் மறைக்கமுடியாத பூரிப்பு ...
தூளாவி அலசி விட்டு மீண்டும் உரையாடலைத் தொடங்கவும் இந்த வரிகள் பதித்த அச்சிட்ட "கற்க கசடற" கைகளில் தவழ்ந்தது ...
எனக்கும் சு.சத்திய கீர்த்தி குடும்பத்திற்கும் மிக மிக வேண்டப்பட்ட செல்வன் தெய்வ. பகீரதன் அவர்கள் அவுஸ்த்திரேலியாவிலிருந்து -தும்பளை வந்து- இந்த அம்மம்மாவையும் பார்க்க பெற்றார் உயர்திரு தெய்வேந்திரம் அவர்களுடனும் அம்மா திருமதி சாந்தகுமாரி அவர்களுடனும் வந்திருந்தார்.
அவர், என்னால் எழுதப்பட்ட இந்த "கற்க கசடற" என்ற நாவலுக்கு சிறந்த விமர்சனத்தை எழுதிய முதல் வாசகன் ஆவார். அத்துடன் அமரர் திரு கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நூலகத்தையும் பார்வையிட்டார்.
"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாள்....?"
என்ற உண்மையை அவர்களது நல்வரவு எனக்கு உணர்த்தியது. நன்றி
இங்ஙனம்,
தங்கள் நல்வரவால் மகிழும்
வள்ளியம்மை சுப்பிரமணியம்.
"சத்தியமனை"
சுழிபுரம்
04/03/2022.
புல்லரித்துப் போய் கைகள் அள்ளிக்கொண்டன.
அள்ளும் கைகள் அணைத்துக் கொடுக்கவும் வேண்டும் - அம்மா சொல்வது அடிக்கடி...
அம்மாவுக்கு முன்னாலேயே எறும்பின் கன்னி முயற்சியையும் கிறுக்கலையும்
அன்பின் சத்தியமனைக்கு,
அறிவூட்டிப் பலரை வெற்றிப்படியேற்றிவிடும் இந்த நூலகம் மேலும் பல நூல்களால் அறிவலங்காரம் பெற வாழ்த்துகள்.
அன்புடன்
தே.பகீரதன்
04/03/2022.
கையளித்து விட்டு விடைதர வேண்டி நிற்க
தேனீர் அருந்தாமல் செல்லமுடியாது என்ற அன்புக்கட்டளை அப்படியே இருந்து இன்னும் பல மணி நேரம் பேச வைத்தது.
நீங்களும் இந் நூலகத்தை பயன்படுத்தி வளம் சேர்க்க வாழ்த்துகள்.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்