Saturday, September 10, 1977

கம்யூனிஸ்டு தோழர் கார்த்திகேசன் என அழைக்கப்பட்ட முருகபிள்ளை கார்த்திகேசன் (25 யூன் 1919 – 10 செப்டம்பர் 1977)

 


  • தோழர் கார்த்திகேசன் சாகவில்லையே…... – வள்ளியம்மை சுப்பிரமணியம்

நானும் என் கணவர் தோழர் மணியமும் காரைநகரில் வசித்த காலத்தில் சில இளைஞர்களுக்கு சில ஐயங்கள் மனதில் எழுந்ததன் காரணமாக "தமிழரைத் தமிழர் அடக்கியாள்வதின் காரணம் என்ன?" என்ற கேள்விக்கு விடை தேடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்களின் உந்துசக்தி, விடாமுயற்சியினால் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்தரத்தில் இயங்கிய தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் காரைநகர் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுவுடமைக் ட்சியானது மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு தோழர் இன்னொரு கிராமத்துக்குப் போகிறார் என்றால் ....அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழர் ஒருவர் அவ்விடத்தில் வசித்தால் தான் அவர் அந்த இடத்திற்குப் போகமுடியும். இரகசியமாகவே அரசியல் வேலைகள் நடந்தன.

 

புரட்சிகரமாகச் சிந்தித்துச் செயலாற்றுபவர்களை அழித்தொழிக்க, மேலாதிக்க சக்திகள் எந்நேரமும் தயாராக இருப்பார்கள்; உளவுப் பிரிவைக் கூட அனுப்புவார்கள். அதனால், இளைஞர்களின் சந்தேகங்களைப்போக்க வருபவர் தனது தோழர் ஒருவரின் இல்லத்தில் தான் தங்கவேண்டும். அந்த வீட்டில்தான் இரவு தங்கி அதிகாலையில் பயணம் செய்யமுடியும். "உயிர் காப்பான் தோழன்" என்பது எவ்வளவு உண்மை!

 

அந்தக் குறிப்பிட்ட மாலை 5-45 க்கு தோழர் மணியம் அவர்கள் பேருந்து நிறுத்த இடத்திற்குச் சென்று தோழர் கார்த்திகேசன் மாஸ்டரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வரமுன்னரே இளைஞர்கள் ஒன்பது பேரும் வந்துவிட்டனர். மிகுந்த மரியாதை கலந்த மலர்ந்த முகத்துடன் எழுந்துநின்று தோழரை வரவேற்றனர். அண்மையில் தான் சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பியிருந்த தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள், தோழர் மணியத்திற்குக் கொடுப்பதற்காக சோவியத் சோசலிசக் குடியரசு அமைய அரும்பாடுபட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலையைக் கொண்டு வந்திருந்தார்


தான் நேரில் பார்த்த சோசலிசக் குடியரசின் ஆட்சியமைப்பின் விழுமியத்தைக்கூறி "இந்த அடையாளச்சின்னம் தோழர் மணியத்திடமிருப்பது தான் பொருத்தமானது" என்று கூறி தோழரிடம் கையளிக்கும்போது சகலரும் அந்நிகழ்ச்சிக்கு கரகோசம் செய்து ஆரவாரித்தனர்.

 

அதன்பின்னர், இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாகச் சகலரின் சந்தேகங்களுக்கும் மாஸ்டர் விளக்கமளித்தார். பொதுவுடமைத் தத்துவம் என்பது மார்க்ஷிச சிந்தனையின் அத்திவாரத்தில் அமைந்துள்ளது. அதனை விளக்கி எழுத எனக்கு அறிவாற்றலோ, ஆளுமையோ போதாது.

 

 

அதன்பின்னர் 9-30 மணியளவில் உணவருந்திய பின்னர் தோழர் கார்த்திகேசன் மாஸ்டருக்கு நித்திரைக்குரிய நேரம். வாடகை வீடு பெரிதாக இருந்தாலும், எம்மிடம் கைவசம் இருந்த பாவனைக்குரிய பொருட்கள் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தன. தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் பத்திரமாகவும் , நிம்மதியாகவும் உறங்க வேண்டும் என்பதற்காக நல்ல பாய், சுத்தமான வெள்ளைத் துணிப் படுக்கை விரிப்பு, சுத்தமான தலையணை இவற்றை அன்று சாயந்தரமே தயார்படுத்தி, கூடத்தில் அறைக்குள் பத்திரமாக தோழர் மணியம் வைத்திருந்தார்.

 

மறுநாள் அதிகாலை 4-00 மணிக்கே யாழ்ப்பாணம் போகிற பஸ் வண்டி , காரைநகர், மேற்கு றோட்டிலுள்ள புதுறோட் சந்திக்கு வந்துவிடும். தோழர்கள் இருவரும் எழுந்ததோ, சுடுநீர்ப்போத்தலில் விட்டுப் பத்திரமாக வைத்திருந்த தேநீரைக் குடித்த பின் பேருந்தைப் பிடிக்கப் போனது பற்றிய விபரம் ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் புனிதமான , வெள்ளைநிறமும், சாம்பல் நிறமும் கலந்த , சலவைக் கல்லினால் ஆக்கப்பட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலை மாத்திரம், நாங்கள் 4 கிராமங்கள், 6 வீடுகள் ( எனது தொழில் நிமித்தம்) மாறி, மாறி வசித்த காலத்திலும் பத்திரமாகவும், புனிதப் பொருளாகவும்  தோழர் மணியம் பாதுகாத்தார் என்பதை நினைக்கும் போது , ‘அவர் தான் நேசித்த கட்சியையும், தோழமையையும் பேணினார்' என்பதை .... அவரது மனைவியாகிய என்னால் இந்த முதிய வயதில் ஞாபகத்தில் நிறுத்தும் போது கண்களைக் கண்ணீர் நனைக்கின்றது! தொடர்வேன்.....

தோழர்கள் வி.பொன்னம்பலம், கார்த்திகேசன் மாஸ்ரர் , வி.ஏ. கந்தசாமி, நீர்வை பொன்னையன் என பலரும் வருவர்அதில் கார்த்திகேசன் மாஸ்ரர் ஏற்கெனவேவந்திருக்கும் இளைஞர்களுக்குவகுப்பு எடுத்த பின்.... இரவு தங்கி மறுநாள் அதிகாலை பஸ் வண்டி எடுத்துப் போய் விடுவார். அந்த நேரத்தில் அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித, ஆங்கில ஆசிரியர்.

இலங்கை நாட்டில் பொதுவுடமைக் கருத்துக்களை..... அதாவது தாம் அறிந்தவற்றை ஆர்வமுள்ள வாலிப உள்ளங்களுக்கு..... அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு.... நடைமுறை சாத்தியமான விளக்கங்கள் தேவைப்பட்டது. அறிவுரை கேட்க வந்த இளைஞர்கள்.... காலப்போக்கில்உலகளாவிய ரீதியில். ....கட்சி , இரண்டாக பிரிந்த பின்னர் நடந்தவை எனக்குத் தெரியாது.


அந்தக் காலப்பகுதில் மீண்டும் கட்சியினுள் கருத்து மோதல்கள் ஆரம்பித்தன. பல தமிழ், சிங்கள தோழர்கள் வந்து மணிக்கணக்கில் பேசினர். எனக்குத் தெரிந்து தோழர் சண் அளவிற்கு , இவரால் மிக நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டவர் தோழர் வி.. கந்தசாமி. ஒரு தடவை தோழர் மணியமும் அவரும் எமது காலையடி வீட்டிற்கு வந்த போது, மணியம் தோழர்  பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடக்க முடியாது இருந்த அவரை தன் கைகளில் காவி வந்ததாகச் சொன்னார். திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியராக வாழ்வை அமைத்துக்கொண்டவர் என்ற மரியாதை எப்பவும் எனக்குமுண்டு. என் பிள்ளைகள் மீது அதீத அன்பு காட்டியவர். அவரது பேச்சுக் கேட்பதற்காக அந்தக் காலங்களில் இளைஞர்கள் கூட்டத்திற்கு  வருவர். மீண்டும் பிரிவோ என்கிற பயத்தை தோழர்களின் வருகைகளும், கதைகளும் உணர்த்தின. தோழரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்ட போது , 'உட்கட்சிப் போராட்டம்' என்பது , “சிறந்த மக்களுக்கான அமைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்ல இவை போன்ற கருத்தை கருத்தால் புரிந்து கொள்ளுவதன் மூலமே முடியும். இவை இருப்பது தான் சரிஎன்றார். எனக்கு இருந்த ஒரே கவலை பிரிவு வந்துவிடுமோ என்பதே. ஒருநாள் காலை தோழர் வீட்டின் வளை மீதுகொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். தோழர் வி. கந்தசாமி தனியே வந்தார்சுக விசாரிப்புகளின் பின்னே வீட்டு வளையைப் பார்த்தார். "! எனக்காகத் தான் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரா?" என்று கேட்டார். அவரிடம் இருந்து தகவல் அறிய நான் முற்படவில்லை. அதை நான் எப்போதும் செய்ததும் இல்லை. “வந்தேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளை கவனமாகப் பாருங்கள்என்று தோழர் வி.. கந்தசாமி அவர்கள் சொல்லிச் சென்றார். ஏனோ எனக்கு கண்ணீர் தளம் தட்டியது.

 

ஜே.வி.பி. பிரச்சனையால் தோழர் சண் ஜெயிலில் இருந்தார். அத்தருணம் வாட்சன் பெனார்ண்டோ, றொசாரியோ, ராமையா, .ரி. மூர்த்தி (செங்கொடிச் சங்கத் தோழர்கள்)  , HLK கரவிட்ட , நிகால் டயஸ்  எனச் சில தோழர்களுடன் நீர்வை பொன்னையன், வி.. கந்தசாமி, கார்த்திகேசன் மாஸ்ரர், தோழர் கதிரேசு எனச் சிலரும் தோழர் சண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாகக் கூறிப் பிரிந்தனர். தோழர் மணியம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் உரையாடல்களில் 1969இல் நடந்த சட்டமறுப்பு மேதின ஊர்வலத்தின் பாதிப்பு பற்றி தலைமையைக் குற்றம் சாட்டியது என் காதுகளில் அரசலாகக் கேட்டது. நான் அது பற்றித் தோழருடன் இறுதி வரை கேட்டதே இல்லை. பின்னர் , பிரிந்த அவர்கள் வேறு ஒரு பெயருடன் இயங்கினர்


தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள், சிங்கப்பூர்.... மலேசிய குடும்ப வழி வந்த கல்விமான். தனது உடன் பிறந்த சகோதரிகளின் ஆதரவுடன் தனது பிள்ளைகளையும் ஒரே வீட்டில் .....ஐக்கியமாக, அனுசரணையாக வாழ... வளர... வழி வகுத்த ஆசான். அதிகம் பேசமாட்டார். அவரது மொழிகளில் ஒரு வசனம் ஞாபகத்தில் இருக்கிறது. அதாவது.... “சாதம் இன்றேல்..... சாந்தம் ஏது?”...... இது எவ்வளவு உண்மை.– வள்ளியம்மை சுப்பிரமணியம்

ஈழநாடு 1977.09.12


1971 ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சி நடைபெற்ற கால நாடு பூராவும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு) தலைவர்களை பொலிசார் தேடித்திரிந்த நேரம், தோழர் சுப்பிரமணியம் அவர்களும் தேடப்பட்ட நேரம் அந்த நிலையிலும் தோழர் சுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் வந்து செல்வநாயகத்தார் தோழர் கார்த்திகேசன் நிலை பற்றித் தெரிந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் தோழர் சுப்பிரமணியம் அவர்களும் கார்த்திகேசன் இல்லத்தை நோக்கி ஒரு காரில் சென்றோம்.

 

அவரின் இல்லத்திற்கு சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டு நான் மட்டும் கார்த்திகேசன் இல்லத்திற்குச் சென்று அவரின் நிலைபற்றி அறிந்து வந்தேன். தோழர் கார்த்திகேசன் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார் என்ற செய்தி கேட்கும் மட்டும் அவர் துடித்த துடிப்பும் அதன் பின் அடைந்த மகிழ்ச்சியும் நினைவு கூறத்தக்க ஒரு நிகழ்வாகும்.

 

தான் தேடப்பட்ட அந்த நேரத்திலும் தனது பாதுகாப்பை விட சக தோழர் ஒருவரின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதிய அவரின் உணர்வு உண்மையிலேயே மிக உயர்ந்த  கம்யூனிஸ்ட் போராளியின் உணர்வாகவே இருக்கமுடியும்.

 யாழ்ப்பாணம் இ. செல்வநாயகம் 1989


Thursday, July 21, 1977

1977 தேர்தல் பகிஷ்கரிப்பு துப்பாக்கிப் பிரயோகம் Boycotting of Parliamentary elections held in Sri Lanka on 21 July 1977.

 



ஈழநாடு 1977.07.27 Page 6
கைதான நால்வர் பெயர்களில் ‘…நடேசன், இரவீந்திரன்’ என்ற இருவராக குறிப்பிடப்படுவது என்னுடைய ‘இராஜதந்திர உத்தி’ காரணமாக நேர்ந்தது; என்னுடைய பதிவில் அது பற்றி எழுதி இருந்தேன் (தயாளன் விடுபட்டுள்ளார். அவர் பெயரைக் கேட்ட போது நேரமெடுத்து - ஆறுதலாக ‘..ரா..ம..நாத..ன்’ என்று சொன்னதும் தான் அதி புத்திசாலித்தனமாக ‘நடேசன்’ என்று என் பெயரைச் சொன்னேன்).- ந.இரவீந்திரன்

Boycotting of Parliamentary elections held in Sri Lanka on 21 July 1977.

1977 தேர்தல் காலம் ஆரம்பமானது. பனிப்புலம் காலையடி கிராமம் தமிழர் கூட்டமைப்பின் பிரதான வாக்கு வங்கிக் கிராமமாக அமைந்திருந்தது. சிறு சிறு முரண்பாடுகள் வந்தாலும், அமிர்தலிங்கம் அவர்களின் அயற்கிராமம் வேறு. சொல்லவேண்டுமா? ஐம்பதுகளில் அறுபதுகளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் கலந்து கொண்ட போதிலும், பின் 'பாராளுமன்றம் திருடர் குகை' என்ற கோசத்துடனே பாராளுமன்றத் தேர்தல்களில் ஈடுபாடின்றி இருந்தனர்.  இந்நிலையில் அந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற முடிவுடன் காலையடி கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க இளைஞர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். எனினும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரச்சனைகளை உருவாக்கி ஊர்மக்களின் நல்லுறவைச் சிதைக்க வேண்டாம் என மணியம் தோழர் வலியுறுத்தினார். இருந்தும் இள இரத்தம் பயமறியாது தானே ? ஊர் பெரியவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க முற்பட்டனர். அது சம்பந்தமாக அம் மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினர். பல முற்போக்கு நாடகங்கள், கண்காட்சிகள், கருத்தரங்கம் என நடாத்தி வந்தனர். இரவியும் புதிதாக ஆசிரிய தொழிலில் இணைந்திருந்த வேளையிலும் இதன் பொருட்டு ஊர் திரும்பியிருந்தார். முதலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தடுத்த தோழர் மணியம் அவர்கள், நிலைமை எல்லை மீறியதால் அவர் நேரடியாக களத்திற்கு விரைந்தார். தன் பாதுகாப்பின் பொருட்டு கைத்துப்பாக்கி ஒன்றை தன்னுடனே வைத்துக் கொள்வார். அதையிட்டு நான் பயப்படாத நாளில்லை. குழந்தைகளின் கண்களில் படாமல் அதை வைத்திருந்தார்.

அங்கு இரவியின் தாய் மாமன் சண்முகலிங்கம் மாஸ்டர் மற்றும் மிக நெருங்கிய உறவுகளுக்கு எதிராகவே இவ் ஒழுங்கு நடைபெற்றது. நடைபெற்ற தள்ளுமுல்லில் இடுப்பிலிருந்த துப்பாக்கி கீழே விழ ... அதை ஆமியில் வேலை செய்த ஊரவர் எடுத்துவிட்டார். பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற நோக்கில் மணியம் தோழர் இளைஞர்களை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். துப்பாக்கியை மீண்டும் எடுக்கும் வழி மணியம் தோழருக்கு தெரியாத ஒன்றல்ல.

துப்பாக்கியை எடுத்தவர்களுக்கு அது பற்றிய போதிய அறிவு இருக்கவில்லைப் போலும். விசையை அழுத்த உள்ளிருந்த குண்டு கல்லில் பட்டு தெறித்த கற்துண்டு அங்கிருந்த சிறு பையனின் கையில் காயத்தை உண்டு பண்ணியது. பொலிசில் போய் அவர்கள் முறைப்பாட்டை செய்திருந்தனர்.  இதை உணர்ந்த தோழர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இந்த இளைஞர்கள் தேவராஜா, தயாளன், இரவி, யோகேஸ்வரன்  அனைவரும் எம் வீட்டிற்கு வந்துவிட்டனர். தேனீர் தயாரிக்க உள்ளே சென்ற வேளை வாகனம் உள் நுழையமுடியாத எம் ஒழுங்கையினுள் 'ஆள்காட்டி' ஒருவருடன் காவற்படை வீட்டை சுற்றிவளைத்தனர்.....

தொடர்வேன்....

நான் இக்குறிப்பை தோழர் மணியம் மூலமும், இளைஞர்களின் வாய்மூலமும் , நான் கண்கண்ட  சிலதுமாக எழுதியுள்ளேன். இதன் விபரக்குறிப்பை இரவி விபரமாக எழுதியுள்ளார். அது கீழே :


1977 தேர்தலும் எமது பகிஷ்கரிப்பு நடவடிக்கையும் - அதன் பிரதிபலிப்பும்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்திய நிலையில்  மக்கள்  அங்கீகாரத்தை வழங்க வேண்டிய தேர்தல் களமாக 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார்கள். அந்தவேளையில் எமது ஊர் கூட்டணி ஆதரவாளர்கள் அம்மன் கோயில் பிரச்சினை காரணமாக இரண்டுபட்டு இருந்தனர். முன்னர் அமிர்தலிங்கத்தின் கோட்டையாக கருதப்படுகிற எமது ஊரில் தேர்தல் காலத்தில் பிரமாண்டமான கூட்டத்தை நடாத்துகிற எமதூர் கூட்டணியினரால் இத்தகைய முக்கியத்துவமிக்க சூழலில் அவர்களிடையேயான பிளவு காரணமாக ஒரு சிறு கருத்தரங்கைக் கூட நடாத்த இயலவில்லை.

அவர்கள் பலவீனப்பட்டிருந்த அந்தவேளையில் எமது கட்சி வேலை மிக மும்மரமாக நடந்து வந்தது. ஊரின் மிகப்பெருபாலான இளைஞர்கள் எமது வாலிபர் சங்கத்தில் இணைந்திருந்தனர். ஏனையவர்களும் எமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். அந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எமது கட்சி முடிவைப் பிரசாரப்படுத்தும் கூட்டம் ஒன்றினைக் காலையடியில் நடாத்த வேண்டும் என்ற எமது வாலிபர் சங்க முடிவை ஊரின் இளந்தலைமுறையின் பலரும் அங்கீகரித்திருந்தார்கள்.

இந்த முடிவை வாலிபர் சங்கம் எடுத்தபொழுது நான் அங்கு இருக்கவில்லை. பூண்டுலோயாவில் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்த ஆரம்பகாலமது. நான் ஊர் வந்து தோழர் மணியத்தை சந்தித்த பொழுது வாலிபர் சங்கம் முடிவு குறித்து கட்சியின் வட பிரதேசக் குழுவுக்கு உடன்பாடு இல்லை, மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். அப்போது எமது ஊர் சார்ந்து நான் மட்டுமே கட்சி உறுப்பினர். நான் அங்கம் வகித்த சங்கானைக் கிளையில் இவ்விவகாரம் பேசப்பட்டது. அங்கும் எமது கட்சியின் முதல் கூட்டத்தை உங்களூரில் நடாத்துவதற்கு இது ஏற்புடைய தருணமாக இருக்காது என்ற முடிவே ஏகமனதாக முன் வைக்கப்பட்டது. இந்த அறிவுறுத்தல்களுடன் மீண்டும் எமதூர் வாலிபர் சங்கக் கிளையைக் கூட்டும்படிகோரி கட்சி நிலைப்பாட்டை முன்வைத்தேன். மிகப் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை நடாத்தியாக வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர். பெரும்பான்மைமுடிவு காரணமாக கட்சி பின்னர் தலையிடவில்லை.

கூட்ட ஏற்பாடுகள் முனைப்பாகி மேடை நிர்மாண வேலைகள் மும்முரப்பட்டிருந்த பொழுதே கூட்டணிக்காரக் குழப்பகாரர் குறுக்கீடுகளைத் தொடங்கி ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற எச்சரிக்கைகளை விட்டபடி அங்குமிங்குமாக போக்குக்காட்டி ஊடறுத்துக்கொண்டு உலாவினர். அவர்கள் அனைவரும் என்னை மிக நேசிக்கும் உறவினர்.இருந்தும் கொள்கை முரண்பட்டிருந்தோம்.நிலைமை மோசமாகும் எனத் தெரிந்த போது கிருஷ்ணதாசனும் வேறொரு தோழரும் தோழர் மணியத்திடம் ஆலோசனைபெறச் சென்றனர். நான் சங்கானை நிச்சாமம் சென்று கட்சிக்கிளைத் தோழர்களைச் சந்தித்தேன். தருமண்ணையும் வேறோரிரு தோழர்களுமாக கலந்துரையாடினோம். அவ்வளவுடன் ஏற்பாடுகளை நிறுத்தி கூட்டத்தை வேறொரு நாளுக்கு பின்போடுவதாக அறிவித்து விடலாம் என சங்கானைத் தோழர்கள் முடிவு தெரிவித்தனர்.

கூட்ட களத்துக்கு நான் திரும்பி நிலைமையைச் சொன்னேன். கிருஷ்ணதாசன் மணியம் தோழருடன் உரையாடல் எப்படி இருந்ததென்பதைச் சொன்னார். “முன்னரே இப்படி ஆகும் என்பதைக் கூறிக் கூட்டத்தைக் கைவிடுங்கள் என்று ஆலோசனை சொன்னோம்; நடாத்தியே தீருவோமென்று முனைந்தீர்கள். இப்போது வெருட்டலுக்குப் பயந்து கைவிடுவதா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மணியம் தோழர் சொன்ன பொழுது, எமது தோழர்கள் “இல்லைப் பின்வாங்குவது தவறாக அமையும்” என்று கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

பல தோழர்கள் மிகுந்த உறுதியோடு வேலைகளில் ஈடுபட்டபடி. கூட்ட நேரம் நெருங்கிவிட்டது. தமது அச்சுறுத்தலுக்குச் சளைக்காமல் கூட்டத்தை நடாத்தப்போகிறார்கள் என்பதை அந்தச்  சண்டித்தன உறவினர்கள் புரிந்து கொண்டு மதுவருந்தி முறுக்கேறியவர்களாக வந்து சண்டித்தனத்தில் இறங்கினர். கைகலப்பு வலுத்தது. முற்றிலும் எமது வாலிபர் சங்கத் தோழர்களே எதிர் தாக்குதலை நடாத்தி அவர்களை முறியடித்துக் கொண்டிருந்தோம். நான் கூட்டத் தளத்திலிருந்து சற்று தூரமாக ஒரு தரப்புடன்; அங்கே குழப்ப வந்ததில் தலைமை தாங்கிய எனது மாமாவும், இன்னொரு ஒன்றுவிட்ட மாமாவும். அவர்களால் என்னைத் தாக்கவும் முடியாமல் பின்வாங்கிப் போய்க்கொண்டிருப்பதில் அவர்களைக் கலைப்பதில் எனது கவனம்.

அந்தவேளை கூட்டக் களத்துக்கு தோழர் மணியமும் சங்கானைத் தோழர்களும் வந்திருந்தனர். எமது தோழர்களே எதிரிகளை முறியடிப்பர் என்ற நிலையில் சண்டையில் கலக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆயினும் வெறியேறிய  சண்டித்தன உறவினர்கள் வலிந்து இவர்களை மல்லுக்கட்டிப் பிடித்திழுத்த பொழுது அரை மடியில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. நிலைமையை விளங்கிய தோழர்கள் அங்கிருக்க வேண்டாம் என முடிவு செய்து  திரும்பி விட்டனர்.

கீழே விழுந்த துப்பாக்கியை மீளப்பெறுவதோ, வெறியேறிய அக்காடையர்களைத் தாக்குவதோ வந்திருந்த சங்கானைத் தோழர்களுக்குப் பெரிய விடயம் கிடையாது. நீண்ட காலத்தில் கொம்யூனிஸ்ட்டுகளாக நாங்கள் ‘எமது சொந்தப் பலத்தில் முன்னேற வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்தால் களத்தை விட்டு வெளியேறினர். பின்னர், ஊருக்குள் அவர்கள் வராமலே மரியாதையுடன் கைத்துப்பாக்கியை எம்மிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஒரு சொல்லுக்குப் பயந்து இவர்கள் அதனைக் கொண்டுபோய்க் கொடுத்தவர்கள்தான்.

கைத்துப்பாக்கியை எடுத்து வந்தவர்கள் நடையர் கடையடியில் அதனை இயக்க முனைந்த பொழுது வெடிக்கவில்லை. “விளையாட்டுத் துவக்கை, வெருட்டக் கொண்டு வந்திருக்கிறாங்கள்” என்று சொல்லி ஓங்கி விசுக்கி விசையை அழுத்திக் குலுக்கிய போது வெடித்த சன்னம் நிலத்தில் மோதிப்பறந்தது. மண்ணிலிருந்து பறந்த கல்லொன்று பக்கத்தே இருந்த சிறுவனின் கையில் சிராய்த்துப் போனதில் இரத்தக் காயமானது. உடனே அவனை எடுத்துச் சென்று பொலீசில் நாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஏற்பட்ட காயமென்று முறைப்பாடு செய்து சங்கானை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்.

காவல்துறையில் முறைப்பாடு போயிருக்குமென எங்களுக்குத் தெரியும். ஆயினும் மணியம் தோழரை இணைத்திருப்பர் என்று நினைக்கவில்லை. அவருடன் ஆலோசிப்போம் என்று அவர் வீட்டுக்குச் சென்றோம். அவர், முறைப்பாட்டைத் தன்னை இணைத்தே கொடுப்பர் என முன்னனுபவங்களால் புரிந்தவராதலால் வீட்டுக்கு வரவில்லை. நாங்களோ அந்தளவு தெளிவற்றவர்களாக அவரது வருகைக்காக காத்திருந்தோம். ஒரு ஜீப் தான் வந்தது. பொலீசுக்கும் எங்களைவிட அவரைப் பிடிப்பதே அரசியல் முக்கியத்துவம் மிக்கது என்பது தெரிந்திருந்தது.

நாலைந்து காவலர்கள் படலையைத் திறந்து உள்ளே வந்து “மணியம் எங்கே?, நீங்கள் யார்?” எனக் கேட்டனர். அவர் இங்கு இல்லை, அவரைப் பார்ப்பதற்கு வந்தவர்கள் நாங்கள் என்றோம். ‘உன்னுடைய பெயரென்ன?’ என்று முதலில் தயாளனை ஒரு காவலர் கேட்டார்.

கதிரையில் வைத்திருந்த தனது சேர்ட்டைப் போட்டு தெறிகளைப் பூட்ட நேரமெடுப்பது போலப் பாவித்து நிதானமாக ‘ரா..ம..நா..தன்’ என்றான்; அப்படி அவன் செய்ததால் எனக்குத் தெரிந்தது சொந்தப் பெயரைச் சொல்லக் கூடாது என்பது. அடுத்து என்னைக் கேட்ட பொழுது ‘நடேசன்’ என்றேன். மூன்றாவதாக தேவரும் வேறு பெயரைத்தான் சொன்னார். நாலாவதாக யோகேஸ்வரன் சொந்தப் பெயரையே சொல்லிவிட்டார்; கூட்டத்துக்கு வரவிருக்கும் தோழர்களை பஸ் இலிருந்து அழைத்து வருவதற்காக அரசடிக்கு அவர் போயிருந்த பொழுதுதான் சண்டை நடந்தது. தனது பெயர் முறைப்பாடு செய்யப்பட்டிருக்காது என்று அவர் நினைத்துவிட்டார்.

உடனே ஒரு காவலர், இந்தப் பெயர் இருக்கு எனக்கூறி யோகேஸ்வரனை அழைத்தார். இன்னொருவரோ ‘மணியத்துடன் நாலு பேர் மேல் தானே முறைப்பாடு உள்ளது. நாலு பேரையும் கூட்டிப் போவோம்’ என்று எல்லோரையும் அழைத்துப் போனார்.

ஜீப்படியில் போய் ஏற முற்பட்ட பொழுது, வீடு காட்ட அழைத்து வரப்பட்ட முறைப்பாட்டுக்காரரில் ஒருவரான எமது ஊரவர் ஒருவர் எங்களைக்காட்டி, ‘இவர்கள்தான் ஆட்கள்’ என்றார். பொலீஸ் நிலையத்தில் இறக்கப்பட்டு வாங்கொன்றில் இருத்தப்பட்டு பதிவுக்காக விசாரணை!

முதலில் என்னிடம் ‘உன்னுடைய பெயர் என்ன’ என்றார். ‘ரவீந்திரன்’. அடிக்கப் போவதாக பாவனை காட்டிய போதிலும் அடிக்காமல் விளக்கம் கேட்டார். நான் ‘ஓம், என்னுடைய முழுப்பெயர் நடேசன் இரவீந்திரன்’ என்றேன். என்னுடைய முழுப்பெயர் சமயோசிதத்தால்தான் அடி விழவில்லை என்று அப்போது நினைத்தேன்; பின்னர் தான் தெரியும், நாங்கள் கைதாகிக் கொண்டு செல்லப்பட்டதும் மணியம் தோழரின் குடும்பத்தவர்கள் அருகிலிருந்த இராஜசுந்தரம் சேரிடம் சென்று விடயத்தைக் கூறி இருக்கிறார்கள். அவர் சிபார்சு காரணமாகவே நாங்கள் தாக்கப்படாமல் இருந்திருக்கிறோம்.

மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நால்வருக்கும் ஒரு வாரம் விளக்கமறியல். அந்த இடைக்காலத்தில் நடந்த தேர்தலின் பொழுது தேர்தலைப் பகிஷ்கரிக்க கூட்டம் நடாத்த எத்தனித்து சிறைப்பட்டிருந்த நால்வரின் வாக்குகளும் பிரிவினையை அங்கீகரிக்கும் மக்கள் ஆணைக்குரிய கணக்கெடுப்புக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. ஓமோம், கூட்டணிக் களவாணிகள் எங்களது வாக்குகளையும் ஆள் மாறாட்டத்துடன் தாங்களே போட்டிருந்தனர்.

ஒரு வாரத்தில் நாங்கள் பிணையில் விடுவிக்கப்படும் வரை மணியம் தோழர் தலைமறைவாக இருந்து பின்னரே வெளிப்பட்டு அவரும் ஒரு நாளில் பிணை பெற்றார். காயம்பட்டவர் துப்பாக்கிச் சன்னத்தால் அன்றிக் கல்லுப்பட்டுத்தான் என்ற வைத்திய அறிக்கை வந்திருந்தது. தவிர, கைத்துப்பாக்கியை ‘மரியாதையாக’ சங்கானைத் தோழர்களிடம் கொண்டு போய்க் குடுத்துவிட்டதைப் போலவே எமக்கெதிராக சாட்சி சொல்லத் திராணியையும் அவர்கள் பெற்றில்லை என்பதனால் வழக்கு ஒரு வருடமளவில் இழுபட்ட பின்னர் தள்ளுபடியானது.

அந்த நிகழ்வில் தோழர் மணியம் மற்றும் சங்கானைத் தோழர்கள் நாங்களே எங்கள் பலத்தில் போராட விட்டுப் போனதாக அல்லாமல் அன்றைக்கு அவர்களே களமாடி இருப்பின் எமதூர் குடிகாரக் கூட்டம் அன்றைக்கே ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருப்பர்; அதை வழக்காக ஆக்க முயற்சித்திருக்கவும் மாட்டார்கள். பின்வாங்கிப் போனதைப் பலவீனமெனக் கருதித்தான் தமிழீழம் காண முற்பட்ட அவர்கள் ‘சிறீலங்கா பொலீசில்’ எங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தனர். வெறி முறிந்து நிதானத்துக்கு வந்து, அடுத்தடுத்த நாட்கள் ஊருலகத்தில் நடமாடத் தொடங்கியபோதே சங்கானைத் தோழர்களுடன் சேட்டைவிட முடியுமா என்ற யதார்த்தம் எமதூர் பிரிவினை வீரர்களுக்குத் தெரிந்து ‘மரியாதையாக’ கொண்டு போய்த் துப்பாக்கியைக் கொடுத்திருந்தனர்.

எம்மைச் சுயமாக களமாடி அனுபவம் பெற இடமளித்ததுடன் எமக்குப் பின்பலமாக இருந்து பல வகை உதவிகளையும் சங்கானைத் தோழர்கள் செய்தமையாலேயே நாங்கள் பலமான கொம்யூனிஸ்ட்டுகளாகத் தொடர்ந்து முன்னேற முடிந்தது. நான் பலரிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறேன் “நான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக நீடித்து இருக்க இயலுமானதற்கும் தொடர்ந்தும் உயிருடன் உலவ முடிவதற்கும் நிச்சாம- சங்கானைத் தோழர்களே காரண கர்த்தாக்கள்” என்பதாக!

நிச்சாமத்துக்கென் வணக்கம்!” - ந.இரவீந்திரன்


English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF