*என்னருகே நீ இருந்தால்........!
--------------------------------------------
தாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.
தாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....!
வாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்
ஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்
நோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........!
சாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்
தோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்
தேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.
**காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்
சூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்
பேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......
நீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....
பாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...
சீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....
வேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்
வேராக நீயிருந்து வீரம் தந்தாய்!
அந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்
குன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்
என்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...
என்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...?
உன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான
பொன்மொழிகள்,கவிதைகள், போற்றும் தியானங்கள்....
என்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....
என்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே!
*இம் மாதம் 13-09-2010 திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை
2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு
ஊற்றாகியது. சிங்கப்பூரர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.
**கவிப்பேரரசு- வைரமுத்து அவர்களின் ’தமிழுக்கும் நிறம் உண்டு”
என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு பொன் வரிகள்.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்