மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, நீ தியாக தீபமானாய்!........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் கவிதை!!
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபன் பற்றி 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கவிதை.
-----------------------------------------------------
உண்ணா விரதம் என்பது உண்மையில்....
எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்ததென்று.......
காந்திமகானின் கருணை வழியினிலே......
சாந்தியளிக்கும் சமாதானம் பிறக்குமென்று
மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் நீ பழகி-”நமக்குள்
வேற்றுமை இருந்தால்--விரியுமே எதிரி பலம்
ஆற்றுப் படுத்துவோம், ஆதரவாய்க் கைகொடுப்போம்......”என்று கூறி
தோற்றுப் போனதால்தான்*, துணிந்தாயோ உயிர்துறக்க?
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்று
அடுத்துவரும் சந்ததிகள் ஐக்கியத்தைப் பேணிநிற்க....
மாற்று இயக்கங்கூட தமிழின விடுதலைக்காய்.....
வீற்றிருக்க வேண்டுமென விட்டாயோ உன்மூச்சை?
சோற்றுப் பருக்கையல்ல: சொட்டுத் தண்ணீரே அருந்தாமல்.....
வேற்று மனிதனாகி வெளிக்கிட்டு ஓடாமல்.......
காற்றிலே மிதந்துலாவும் கருணைச் சுவாசமே......!
போற்றும் தியாகத்தால் திலீபா நீ தீபமானாய்..!
இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்....
இனத்தின் ஐக்கியமே நீ கண்ட கனவப்பா!
வனத்தின் நிலவாக வாய்ப்பற்றுப் போகாமல்.....
உனக்கும் ஆத்மசாந்தி ஒற்றுமையில் கிடைக்குமப்பா!
பார்த்திபன் இராசையா ( மலர்வு கார்த்திகை 27, 1963 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.
ஐந்து அம்சக் கோரிக்கை
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
1987 புரட்டாதி 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1987ஆம் ஆண்டு புரட்டாதி 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாக மரணம் எய்தினார்.
*தியாகி திலீபன், 1985/86 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்த அமரர் விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் வோடு மிகுந்த மதிப்பு, நட்பு பாராட்டுகிறவர்.- சத்தியராஜன் 26-09-1989.
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்