இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற தமிழ் மக்களுக்கு புதிய பாதையும் தலைமையும் வேண்டும்....
" தொழிலாளி 1971.01.19 பத்திரிகை " in PDF
" இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற தமிழ் மக்களுக்கு புதிய பாதையும் தலைமையும் வேண்டும்.... " in PDF
இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற தமிழ் மக்களுக்கு புதிய பாதையும் தலைமையும் வேண்டும்.... ‘தொழிலாளி’ 1971.01.19
' ஏ. சின்னதம்பி' என்ற பெயரில் கே ஏ சுப்பிரமணியம்
இணைப்பாட்சி எனப்படுகின்ற சமஸ்டி ஆட்சி அமைப்பு முறைதான் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழுகின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு மிக பொருத்தமானது என்று இலங்கை தமிழ் அரசு கட்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கொள்கையாகக் கூறி வருகின்றனர்.
சமஸ்டி ஆட்சியை அமைப்பது தான் தங்கள் லட்சியம் என கூறிவந்த தமிழரசுக்கட்சியினர் 1957ஆம் ஆண்டு காலம் சென்ற திரு S.W.R.D பண்டாரநாயக்க உடன் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தில் பிரதேச சபைகள் அமைப்பதற்கும், பின்னர் 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க உடன் செய்து கொண்ட ஓர் உடன்பாட்டில் மாவட்ட சபைகள் அமைக்கவும் ஒப்புக்கொண்டு சமஸ்டி கோஷத்திலிருந்து கீழே இறங்கினர்.
‘ பிரதேச சபைகள்’ அமைக்கப்படுவதற்கு பெரும் எதிர்ப்பை கிளப்பிய டட்லி ஜே ஆரின் யுஎன்பி கட்சி பின்னர் மாவட்ட சபைகளுக்கு ஒப்புக் கொண்டபோது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, என். எம் பெரேரா, பீட்டர் கெனமன் ஆகிய கூட்டாட்சிவாதிகள் அதை பலமாக எதிர்த்தனர். இவர்கள் சமஸ்டி கட்சி கட்சியினரை மட்டுமல்ல சமஸ்டி கோரிக்கையையும் தமிழினத்தையும் கடுமையாக கண்டித்து வந்தனர் . இப்பொழுது இவர்கள் தமிழ் மக்கள் மீது தங்களுக்கு வெறுப்பு இல்லை என்றும் இந்த நாட்டில் உண்மையான சோஷலிஸத்தை உருவாக்க தமிழ் மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும் என்று கோருகின்றனர் .
சமஸ்டி பற்றிய வாதப்பிரதிவாதங்கள்
தமிழர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எப்படியாவது பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கூட்டாட்சிவாதிகள் குறிப்பாக பீட்டர் கெனமன் இலங்கரத்தினா , வி பொன்னம்பலம் போன்றவர்கள் சோஷலிஸத்தில் சமஸ்டி சாத்தியமென்றோ சோஷலிஸத்தில் சமஸ்டி பிரச்சனை தீரும் என்றும் கூறிவருகின்றனர்
அதேநேரம் சமஸ்டியின் பின் தான் சோஷலிஸம் சரிவரும் என்று தமிழரசுக்கட்சியினர் பதிலளிக்கின்றனர். சமஸ்டி பற்றி வாதப் பிரதிவாதங்கள் பேச்சிலும் எழுத்திலும் முன்னெப்போதையும் விட இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சனை என்றும் பிரதான முரண்பாடு களில் ஒன்றாக கூர்மையடைந்து வருகிறது என்ற உண்மையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் உணர்த்துவதாக இருக்கின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழரசுக் கட்சியே தமிழ் மக்களுக்கு பெரும்பாலும் தலைமை தாங்கி வருகிறது. இந்த கடந்த காலத்தில் ஆட்சி பீடத்திற்கு மாறி மாறி வந்துள்ள சேனநாயக்க பண்டாரநாயக்கா குடும்பங்களுடன் தமிழரசுக்கட்சியினர் பேரம் பேசி சில சலுகைகளை பெற்று வந்திருக்கின்றனர்.
பேரப் பேச்சு எதிர்ப்பு நடவடிக்கை என்பவை, இவர்கள் தமது வர்க்க நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டனவாகும். தமது வர்க்க நலனுக்கான சமரசங்களுக்கும் சலுகைகளுக்கும் இன்றும் இதன் தலைமை இருப்பினும், தமிழ் மக்கள் தாங்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்த படுகிறோம் என்றும், இந்த நாட்டில் தமது உரிமைகள் யாவும் ஏனையவர்களை போல பூரணத்துவம் உடையதும், சுதந்திரம் உடையதாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதியான உணர்வுடனும் தான் இருக்கின்றனர்.
தமிழரசு கட்சியின் தலைமைப்பீடம் அவ்வப்போது இருந்த அரசாங்கங்களுடன் பேரம்பேசி சலுகை பெற்று ஆதரவு கொடுக்க முனைந்த காலங்களில் கூட இவர்களுடைய தலைமையை பொருட்படுத்தாது தங்களுடைய எதிர்ப்பை ஆணித்தரமாக தமிழ் மக்கள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றனர் .
தமிழரசு கட்சியிலேயே இந்த எதிர்ப்பின் பிரதிபலிப்பைக் காண கூடிய சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டன. தமிழ் மக்களின் தொடர்ந்த, விட்டுக்கொடுக்காத எதிர்ப்பு தமிழரசுக் கட்சியையே தொடர்ந்து எதிர்க்கும் எதிர்ப்பாக மாறி வருவதை உணர்ந்த தமிழ் அரசின் தலைமை பீடம் இப்போது சோஷலிஸத்தில் தேடுகின்றது.
முதலாளித்துவ நாடுகளில் சமஸ்டியும் இன ஒடுக்குமுறையும்
தற்சமயம் உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு வகைப்பட்ட சமஸ்டி அமைப்புள்ள நாடுகள் உண்டு. முதலாளித்துவ நாடுகள் பல தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள் கட்டப்பட்டு தோல்வியுற்ற அனுபவங்களை கண்டிருக்கின்றது பழைய ஆஸ்திரிய ஹங்கேரிய சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி பல அனுபவங்களை கூறும். இன்று அமெரிக்கா கனடா இந்தியா போன்ற ( பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி அமைப்பை இந்த நாடுகள் பின்பற்றுவதாக இவர்கள் போற்றுகிறார்கள் ) நாடுகளை இரு பகுதியினரும் ( கூட்டாட்சி வாதிகளும் சமஸ்டியினரும் ) உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாததும், சோஷலிச நாடுகள் என்று கூறிக்கொள்ளும் நாடுகளையே எடுத்துக்காட்டாக கூறிக் கொள்வதும் சோஷலிஸம் ஒன்று நான் தான் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முடியும் என்றது முடியும் என்பதாகிறது.
மனிதனை மனிதன் சுரண்டும் வர்க்கப்பிரிவினை உள்ள முதலாளித்துவ அமைப்பு நாடுகளில் சமஸ்டி அமைப்பு மூலமோ அல்லது வேறு எந்த அமைப்பு மூலமோ தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒருபோதும் முடியாது.
முதலாளித்துவ அமைப்பை கொண்டுள்ள நாடுகளில் சுரண்டலும் பாகுபாடு பிரிவையும் தொடர்ந்து நிலவும். கிராமத்துக்கு கிராமம், கிராமத்திற்கும் நகரத்திற்கும், இனத்திற்கு இனம், மனிதனுக்கு மனிதன் சுரண்டல், வேறுபாடு, பகைமை, அடக்குமுறை ஆகியவை தொடர்ந்து இருக்கும், வளர்ச்சி பெறும்.
அமெரிக்கா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் சமஸ்டி அமைப்பு முறை தோன்றிப் பல ஆண்டுகளாகியும் தினசரி அங்கு குழப்பங்கள், பயங்கர கொலைகள், இனக்கலவரங்கள் நடந்து கொண்டே இருப்பது இதற்கு தக்க சான்று.
மகத்தான லெனின் ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் தீர்வு கண்டது.
இதினிலும் மோசமாக உலகமே அதிர்ச்சி அடையக் கூடிய முறையில் இன ஒடுக்குமுறை, ஜார் ரஷ்யாவில் நிலவியது. தேசிய இனங்களின் சிறைச்சாலையாக அது விளங்கியது. இந்த நிலையை மகத்தான தலைவர் லெனினதும், துணைவர் ஸ்டாலினதும் தலைமையில் அக்டோபர் புரட்சி முற்றாக மாற்றியமைத்து சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் மக்களின் சோவியத் யூனியன் ஆக மாறி உலகிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது.
தேசிய இனப்பிரச்சனைக்கு வெற்றிகரமாக தீர்வு கண்ட சோவியத் யூனியனையும் அதன் மகத்தான தலைவரான காலம் சென்ற ஸ்டாலின் அவர்களையும் உலகம் போற்றியது. தலைவர் ஸ்டாலின் அவர்கள் மறைந்தபோது உலகம் முழுவதிலிருந்தும் அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டன. இலங்கையிலிருந்து S.j.V செல்வநாயகம் அவர்களும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார். அவர் தமது தந்தியில் தேசிய இனப் பிரச்சினை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் என்பது கவனிக்க கூடியதாகும் .
சோவியத் யூனியனில் ஒடுக்குமுறை ஏன் ?
இன்று நிலைமை என்ன சோவியத் யூனியனும் அதன் வழிவந்த செக்கோஸ்லோவாக்கியா யூகோஸ்லாவியா போன்ற ஏனைய நாடுகளும் ( சீனா , அல்போனியா )தவிர நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேசிய இனப்பிரச்சனையை எதிர் நோக்கியுள்ளன - நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றன.
மகத்தான தலைவர் ஸ்டாலினின் தலைமையில் இருந்த சோவியத் யூனியன் ஆரம்பத்தில் பல தேசிய இனங்களின் யூனியன் ஆக இருந்தது. சோசலிச நிலைமைகளிலும், சமத்துவம், சுயவிருப்பம் ஆகிய அடிப்படையிலும் மாத்திரமே இத்தகையதொரு யூனியன் நிறுவப்பட்டும், இஸ்த்திரப்பட்டும், வளர்க்கப்பட்டும் இருந்தது. பிறகு துரோகி குருசேவினால் ஏற்பட்ட எதிர்ப்புரட்சி மாற்றம் மீண்டும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஏனைய நெருக்கடிகளை போல தேசிய இனங்கள் மத்தியிலும் நெருக்கடிகள் அங்கு தோன்றியுள்ளன. சிறுபான்மை தேசிய இனங்கள் அடக்கப்படுகிறார்கள். பாகுபாடு பலவந்த குடியேற்றம், பிளவுபடுத்தல், சிறை வைத்தல், போன்ற நிலைமைகள் அங்கு சாதாரணமாகி விட்டன. மீண்டும் சகல தேசிய இனங்களினதும் சிறையாக மாறி வருகிறது இன்றைய சோவியத் யூனியன் .
இதே நிலைமைக்கு சோசலிச நாடுகள் என்று கூறிக்கொள்ளும் ஏனைய நாடுகளும் (சீனா அல்போனியா) தவிர வந்துள்ளன. இந்த நாடுகளிலும் இதே நிலைமைகள் தலைதூக்கி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
இந்த நாடுகள் எமக்கு கற்றுத் தருவது என்ன? முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையில், இன ஒடுக்குமுறை ஏனைய ஒடுக்குமுறைகளை போன்றதே முதலாளித்துவ அமைப்பு முறையில் தேசிய இனப்பிரச்சனை வெற்றி பெறாது . சோசலிச அமைப்பாலோ அதற்கு முன்னோடியாக விளங்கும் மக்கள் ஜனநாயக அமைப்பாலோ தான் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும் என்று கற்றுத் தரும் அதே நேரத்தில், இந்த அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு அங்கு சோசலிச அல்லது மக்கள் ஜனநாயக அமைப்பிற்கும் மாறுபட்ட முதலாளித்துவ அமைப்பு புகுத்தப்படுமானால் மீண்டும் பிரச்சனைகள் தோன்றும் என்பதாகும்.
மார்க்சிசம் லெனினிசம் மா சேதுங் சிந்தனை போதிப்பது என்ன?
சோசலிசத்தினதும், மக்கள் ஜனநாயக அமைப்பினதும் பாதை எது?
ஒரு நாட்டில் தொழிலாளி வர்க்கம் அல்லாத ஏனைய வர்க்களினது தலைமையாலும் ஓர் ஆயுதப் புரட்சியை நடத்த முடியும். ஆனால் சோசலிசப் புரட்சியையோ மக்கள் ஜனநாயகப் புரட்சியையோ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளதும் இதர வர்க்கங்களினது புரட்சிகர பகுதியினதும் உறுதுணையுடன், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தான் நிலைநிறுத்த முடியும். உலகம் பூராவும் சோசலிசம் வெற்றி பெறும் வரை கம்யூனிசம் தோன்றும் வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் அந்த நாடுகளை பாதுகாக்கவேண்டும். சோவியத் யூனியனில் நிகழ்ந்தது போன்று எதிர்ப்புரட்சி நிகழாமல் எந்நேரமும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதையே மார்க்சிசம் லெனினிசம் மா சேதுங் சிந்தனை போதிக்கிறது.
ஜனநாயகப் புரட்சிக்காக தமிழ் மக்கள் தேசிய ரீதியில் ஐக்கியப்பட வேண்டும்
இக்கோட்பாடுகளுக்கு அமைந்த நாடுகளாக இன்று உலகில், மக்கள் சீனக் குடியரசும், அல்பேனியா மக்கள் குடியரசும், கொரிய மக்கள் குடியரசும் விளங்குகின்றன. இந்த நாடுகளில் தேசிய இனப் பிரச்சனைகள் பூரணமாகத் தீர்வு காணப்பட்டுள்ளன. சீனாவில் 92% உள்ள ஹான் இனத்தை சேர்ந்த மக்களுக்கு உரிய சகல உரிமைகளையும், மிகவும் சிறு தொகையினரான ஏனைய 8% உள்ள ஐம்பதுக்கு கிட்டிய தேசிய இனங்களும் பெற்றுள்ளன. நான்கு தேசிய இனங்கள் பிரதேச சுயாட்சியையும் மற்றும் இனங்கள் அவர்களது பூகோள பொருளாதார, இன , கலாச்சார அமைப்புக்கேற்ப உரிமைகளை பெற்று இருக்கிறார்கள். ஆக மொத்தம் 600 மக்களை மாத்திரம் கொண்ட ஒரு சிறிய இனம் கூட ஹான் இன மக்களுக்கு உரிய உரிமைகளை பெற்று உள்ளது.
எழுத்து வடிவம் இல்லாத மிகவும் சிறிய தேசிய இனங்களின் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் மகத்தான தலைவர் மா சேதுங் அவர்களை, சகல தேசிய இனங்களினதும் மகத்தான தலைவர் என்று அவர்கள் ஒருமுகப்பட்ட குரலில் அழைக்கிறார்கள் என்றால் அந்தக் குரல் சகல தேசிய இனங்களின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஒலிக்கும் குரல் தான் .
முதலாளித்துவத்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது
இலங்கையில் நிலைமை என்ன ? என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் எவ்வளவுதான் சோசலிச கோஷத்தை போட்டாலும், இவர்கள் தாங்களாகவே உதாரணத்திற்கு காட்டக்கூடிய நாடுகளில் நடந்ததை போன்ற புரட்சி எதுவும் இலங்கையில் நடைபெறவில்லை. மேலும் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவத்தை அதனுடைய அரசு இயந்திரத்தை, ஆயுத பலத்தால் கைப்பற்றவில்லை. தொழிலாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி நடைபெறவில்லை. இவை இல்லாமல் சோஷலிசம் இல்லை. இதுவே மார்க்சிஸ லெனினிஸ முடிவு.
சுயமாக அழிந்துபடும் போக்கில் பூர்சுவா வர்க்க அரசு இடத்தை பாட்டாளி வர்க்க அரசு எடுக்க முடியாது. பொது விதியின்படி பலாத்காரப் புரட்சி மூலம்தான் அது நிகழ முடியும்” என்று லெனின் கூறியுள்ளார்.
ஏற்கனவே காலனிவாதிகளாலும், தரகு முதலாளி வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கதாலும் பாதுகாக்கப்படும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை அப்படியே ஏற்று அதனுடைய இராணுவம், போலீஸ், நீதிமன்றம் இவற்றின் துணையோடு, இதே வர்க்கங்களை சேர்ந்த இன்னொரு பகுதியினர் ஆட்சி புரிகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிச லெனினிச மா சேதுங் சிந்தனையை புரிந்து கொண்டவர்கள் இந்த ஆட்சியில் சோசலிசத்தை கண்டு பிடிக்க முயலும் அவர்களை வெறும் அப்பாவிகள் என்றே கூறுவர்.
ஏகாதிபத்திய துதிபாடும் அவமானச் சின்னங்கள்
இந்நாட்டில் தமிழ் மக்கள், தமது மொழி, இன, பொருளாதார, கலாச்சார சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். முற்றிலும் நியாயமான இந்த போராட்டம் துரதிஷ்ட வசமாக தவறான தலைமைக்குத் சென்று விட்டது. இன்று உள்ள முதலாளித்துவ சமூக அமைப்பிலேயே பாராளுமன்றப் பாதை மூலம் தமிழருக்கான உரிமைகளை பெற முயற்சித்து பல ஆண்டுகளை வீணான கஷ்டங்களுக்கும், அனாவசியமான தியாகங்களுக்கும் உள்ளாக்கி விட்டதையும்; தமது பொது போராட்டத்தில், ஏனைய பெரும்பான்மை இன மக்களுடன் ஐக்கிய படுவதற்கு பதிலாக வேற்றுமையையும் பகைமையையும் வளர்க்கும் நிலை ஏற்பட்டதையும் தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில், தமிழ் மக்களினதும் இளைஞர்களதும் ஸ்தாபனமான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பூரண சுதந்திர கோரிக்கையை எழுப்பியது. டொனமூர் திட்டம் பூரண சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்பதற்காக, அத்திட்டத்தின் கீழ் நடந்த பொதுத் தேர்தலை கூட தமிழ் மக்கள் பகிஸ்கரித்து தமது ஏகாதிபத்திய எதிர்ப்பையும், தேச பிரமாணத்தையும் வெளிக்காட்டினர். அத்தகைய பாரம்பரியம் உடைய தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களின் தலைவர்கள் என்ற சாட்டில், இவர்களுடைய ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கைகள் அவமானம் தரத்தக்கவை.
மொழி, இன, பொருளாதார சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழரசு தலைமை இதேபோன்ற சுதந்திரத்திற்காக, ஏகாதிபத்திய கொள்ளையர்களின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கப் போராடக்கூடிய வியட்நாம், கம்போடிய, பலஸ்தீன் போன்ற ஆசியா, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, பதிலுக்கு மௌனத்தை காட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய துதி கூறுகிறது.
தமிழரசு- காங்கிரஸ் தலைமை வங்கி, பெரும் கம்பெனிகள். ரப்பர் தேயிலை தோட்டங்களில் பெருமளவு சொத்துக்களையும், பெருமளவு நிலங்களையும் கொண்டவர்களுமான நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கங்களை சேர்ந்தவர்கள்; ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டவர்கள்.
எவ்வளவு தான் சுதந்திரத்தைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டாலும், தமது வர்க்கத்திற்கு எதிராக, தமது வர்க்க அரசு அமைப்பிற்கு எதிராக போக மாட்டார்கள். எனவே தான், தமிழ் மக்கள் இதுவரை பின்பற்றியதிலும் முற்றிலும் மாறுபட்டதும்: வெற்றிதரதக்கதுமான பாதையை பின்பற்ற வேண்டும்.
“ துப்பாக்கி குழாயிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்று தலைவர் மா சேதுங் அவர்கள் அனுபவ வாயிலாகவும், ஆழமாகவும் சிந்தித்து கூறிய கூற்றை ஏனைய மக்களைப் போல மிகவும் ஆழமாக தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் .
ஜனநாயகப் புரட்சியை விடுதலைக்கான வழி
இந் நாட்டிலுள்ள சகல தேசிய இனங்களினதும், தொழிலாளர், விவசாயிகள், இதர தேசபக்தர்கள் உடன் ஐக்கியப்பட்டு, அதிகார வர்க்கத்தினது ஆயுத பலத்தையும், அரசு இயந்திரத்தையும் ஆயுதப் போராட்டத்தால் - மக்கள் யுத்தத்தால், நீண்ட காலப் போராட்டத்தின் ஊடாக முறியடித்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க வேண்டும். ஆயுதப் போராட்டமே - மக்கள் யுத்தமே வெல்லக்கூடிய பாதை.
இந்நாட்டில், அடக்குமுறைக்கும் கொடும் சுரண்டலுக்கும் உள்ளான, பெரும்பான்மை இனமான சிங்களமக்கள் மத்தியிலும் ஏனைய தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம்,பல ஆயிரக்கணக்கான கிராம விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அவர்களது கண்ணீராலும் ரத்தத்தாலும் தோய்ந்த சோகக் கதைகளை எழுதிய உயில்கள் மூலம் தமதாக்கிக் கொண்ட பெரும் நிலப் பிரபுத்துவ வர்க்கத்தையும், அன்னிய கம்பெனிகளையும் எதிர்த்து நிலத்திற்காக போராடும் விவசாயிகள், சகல உரிமைகளையும் இழந்து இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள், காலனி முறை கல்வியினால் அவதியுற்று போராடும் மாணவர்கள் - ஆசிரியர்கள், நிலப்பிரபுத்துவ பத்தாம் பசலி சாதி அடக்குமுறைக்கு உள்ளான மக்கள். அந்நிய ஆதிக்கத்தால் அவதியுறும் தேசிய முதலாளிகள், பல கோடி ரூபாய்களை இந் நாட்டிலிருந்து கொள்ளை கொண்டு போகும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களை எதிரிக்கும் தேசபக்தர்கள், தம்மை அடிமை கொண்டுள்ள அன்னிய ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியத்திற்கு பச்சை விளக்கு காட்டும் தரகு முதலாளி வர்க்கம், நிலப்பிரபுத்துவம் ஆகிய 3 மலைகளையும், அடக்குமுறை அரசு இயந்திரத்தையும் மக்கள் யுத்தத்தின் மூலம் தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலம் சுரண்டலற்ற சமுதாய அமைப்பை நோக்கி, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் முன்னேற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கட்சியில் அணிதிரளும் போராளிகளுடன் தமிழ் மக்களும் இணைவது மூலம் தமது போராட்டத்திற்கு தேசிய வடிவம் கொடுக்க வேண்டும்.
இந்த போராட்டம் தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்லாது ஏனைய சகல பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாகும்.
நாடுகளையும் மக்களையும் அடிமை கொள்ளும் ஏகாதிபத்தியம்; சுரண்டலையும், ஏனைய ஒடுக்குமுறைகளை போல இன ஒடுக்கு முறையையும் கொண்டுள்ளது.
சுரண்டலையும் சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டும் சோசலிச அமைப்பானது ஒவ்வொரு நாட்டுடனும் மக்களுடனும் பரஸ்பர சமத்துவ உறவு முறையைக் கொண்டது.
உலக புரட்சியின் சகாப்தம்
முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி அழிந்துபட்டு வரும் அதேவேளையில் சோசலிசம் தடுத்து நிறுத்த முடியாதவாறு முன்னேறுகிறது.
இன்றைய எமது சகாப்தம் உலகம் புரட்சியின் சகாப்தம் ஆகும் .
இந்தோ சீன நாடுகளான வியட்நாம்; கம்போடியா, லாவோஸ் மக்களது வீரமிக்க போராட்டத்தினாலும் அரபு மக்களினதும் நாடுகளினதும் பலஸ்தீன் விடுதலைக்கான போராட்டத்தினாலும் , ஜப்பானிய யுத்த தயாரிப்பை எதிர்த்தும் தென்கொரியாவை தாயகத்துடன் இணைப்பதற்குமான கொரிய மக்களது போராட்டத்தினாலும், சேக்கோசலவாக்கியா, போலந்து மக்களின் சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தினாலும், தைவானை தாயகத்துடன் இணைப்பதற்கான 70 கோடி சீன மக்களின் போராட்டத்தினாலும், இதர நாடுகளினதும் மக்களினதும் கொழுந்துவிட்டெரியும் புரட்சி போராட்டங்களாலும் சுற்றி வளைக்கப்பட்டு உள்ள அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியமும், சோவியத் யூனியன் தலைமையிலான சமூக ஏகாதிபத்தியமும் தத்தமது நாடுகளிலேயே வெகுஜனங்கள் கிளர்ச்சிகளால் நெருக்கடிக்குள்ளாகி நிமிர முடியாது இருக்கின்றன.
மகத்தான சோசலிச சீன விஸ்வ சக்தியாக உலகின் கிழக்கிலும், சோசலிச கலங்கரை விளக்காக ஐரோப்பியாவில் அல்போனியாவும் அனைத்துலக புரட்சிகர மக்களதும் நாடுகளதும் உறுதுணைவராக - சொந்த பிரதேசங்களாக விளங்குகின்றன.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும், சோவியத் யூனியன் தலைமையிலான சமூக ஏகாதிபத்தியமும் கள்ளக் கூட்டு சேர்ந்து உலகை பங்கு கொள்ளும் முயற்சியில் தமது கால்களை அகல வைத்துள்ளது மூலம் அனைத்துலக புரட்சிகர மக்களாலும் நாடுகளாலும் அடிக்குமேல் அடிபட்டு வருகிறது. அதனுடைய அழிவும், உலகப் புரட்சியின் வெற்றியும் தவிர்க்க முடியாதது .
தலைவர் மாவோவின் தீர்க்கதரிசனம்
“இப்பொழுது தொடக்கம், அடுத்த ஐம்பது முதல் நூறு ஆண்டுகள் அல்லது மேலும் கூடுதலான காலம், உலகில் சமுதாய அமைப்பு முறை முற்றாக மாற்றமடையும் மகத்தான சகாப்தமாகவும் மண்ணையும் விண்ணையும் அதிரச் செய்யும் ஒரு சகாப்தமாகவும் முந்திய எந்த வரலாற்றுப் கட்டமும் கண்டிராத ஒரு சகாப்தமாக விளங்கும்.” - இவ்வாறு தலைவர் மா சே துங் அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் கூறியிருப்பது முற்றிலும் சரியானதும் வரலாற்றின் வெளிப்பாடுமாகும்.
இது கூகிள் தமிழ் குரல் தட்டச்சு எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. மெய்ப்புப் பார்த்து தமிழ் குரல் தட்டச்சு மூலம் எழுத்து திருத்தியது செல்வி பாரத பிரியா தட்சிணாமூர்த்தி. 14-07-2020
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்