Tuesday, January 19, 1971

Symbol of our Marriage - Scythe and Hammer in Gold அரிவாளும் சம்மட்டியும் தங்கத் தாலி

 


வசிப்பதற்கு வாடகைவீடு எடுக்கப் பட்ட சிரமங்கள் ஏராளம்! எழுதி முடியாது ....திருமணத்தை அவர் (கே-ஏ-சுப்பிரமணியம் அவர்கள் ) எவ்வளவு புனிதமான நிகழ்வாகவும், வரலாற்றுப் பெருமை மிக்க
சம்பவமாகவும், சிக்கனத்துக்குள் கணக்கிட்டு.... உலகினை உருவாக்கும் சிற்பிகளின் இதயத்தை 
ஈர்க்கவேண்டுமென்று கருத்தைக் கொண்டிருந்தாரென்பதை இன்று குறிப்பிடுகின்றேன்;---
                                  இலங்கை வாழ்- அதிலும் யாழ்ப்பாணப் பெண்களின் திருமாங்கல்யம் பாரப்பரிய
முறைப்படிதான் செய்யப்படுகிறது.எனது தாயாரிடமும், அவரது தாயாரிடமும் தொன்று தொட்டுவந்த மாங்கல்யங்களே இருந்தன. “நமது விவாகத்திற்குத் தாலி கட்டுவதானால் நான் எனது
கட்சியின் சின்னமாகிய அரிவாள், சம்மட்டியைத்தான் செய்விப்பேன் “ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். ஆரம்பத்தில் மறுப்புக் கூறினாலும் “உங்கள் கொள்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.நீங்களும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

 19-01-1962 திருமணத்தில் தாலியை திருமதி- புஸ்பலீலா முருகேசு அவர்களின் கையால்
வாங்கி என்கழுத்தில் பூட்டினார்.அவர் யாழ்/ போதனா வைத்திய சாலையில் கடமையாற்றியவர். 
எமது திருமணப்பதிவுக்கும்,திருமணத்துக்கும் நல்லூர்- தோழர்- இராசய்யா அண்ணர் தான் தனது
வாகனத்தையும்,நேரத்தையும் தந்துதவினார்.திருமணப்பதிவு நல்லூர்-இலட்சுமி அம்மையாரின்
நெறியாள்கையில் நடைபெற்றது.தாலி முத்திரைச் சந்தையடி தங்கச் சிற்பி திரு-நடராசா அவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது.* இந்த இடத்தில் அந்தத் தங்கச் சிற்பியைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும்,.அவர் அதி அற்புதமான ஒரு படைப்பாளி.1952ம் வருடம் பிரித்தானிய இளவரசி எலிசபெத் அம்மையார் இலங்கை வந்திருந்தார். அவருக்கு அன்பளிப்பாகக்
கொடுப்பதற்கு பல விற்பன்னர்கள் தங்கள் கைத்திறனை வெளிப்படுத்தி பல ஆக்கங்களை உருவாக்கினர்.திரு-நடராசா அவர்கள் தங்கத்தால் ஒருகடிகாரத்தைச் செய்து வரவேற்புக்குழுவிடம் ஒப்படைத்தாராம்.அம்மையார் அவர்கள் நாட்டிற்கு வந்திறங்கியவுடனே அவரது அன்புத் தந்தையார் காலமாகிய செய்தியும் வந்ததால் நாடு திரும்பி விட்டாராம்..தந்தையின் மறைவுக்குப் பின்னர் எலிசபெத் அம்மையார் மகாராணியாகி  முடிசூடினாராம்.*
செய்யப்பட்ட தாலியுடன், எனக்குத் தெரியாமலே அரைத் தங்கத்தில் ஒரு மாற்று மோதிரமும் செய்யப்பட்டது.


அப்போது ஒரு தங்கத்தின் விலை ரூபா 90/= மாத்திரம் தான். மோதிரத்தில் “ம “ என்ற தமிழ் எழுத்து இருந்தது.அக்கால நாகரீகம் ஆங்கில எழுத்தில் தான் மாற்று மோதிரம்
செய்விப்பார்கள். அவர் ’மணியம்’ நான் ‘ மணி’  அதனால் நான் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை.’ம’ வுக்கு விளக்கம் என்னவென்று கேட்டார். ‘ எங்களுடைய பெயர் தான்” என்று
 சாதாரணமாகக் கூறிவிட்டேன். அவரின் விளக்கத்தை நீங்களும் செவிமடுங்கள்;----
*ம* என்பது *மனிதன்*, அவன் பிறந்த *மண்* அவனுள்ளத்தை  ஏற்றுக் கொண்ட *மனம் * அவனைப் புரிந்து கொண்ட வாழ்வு தரும் *மணம்* அதனைத் தொடர்ந்துவரும் * மக்கள்* மக்கள் பலத்தால் வரும் * மகிழ்ச்சி* மண்ணிலே வாழ்ந்தகாலத்தில் அவனது செயற்பாடுகள் ....நடைமுறைகள்....
அடக்கு முறைக்கு குரல் கொடுக்கும் * மறுப்பு * அதனால் ஏற்படும் * மரணம்* கூட *ம* வில் தானே
ஆரம்பிக்கிறது.” என்று பெரிய விரிவுரையே ஆற்றி விட்டார்.........(தொடரும்)
கொண்ட வாழ்வு  இணையும் * மணம்*

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF