---------------------------------
மக்களின் ஐக்கியம் ஒன்றேநாட்டின் பலமாக
மதபேத இனபேத பிரதேச பேதமிலா
மக்கள் மனதில் வன்முறையை விதைகாத
தக்கநீர் வளத்தைத் தரமாக உயர்த்திட
விக்கினம் இல்லாத விவசாயம் மேம்பட
தரணிசூழ் உப்புநீர் ந்ன்னீராய் மாற்றிட
அறிஞர் பலரின் ஆலோசனை பெற்றால்
அனைத்து மாகாணங்களும் செழிப்புடன் வளருமே!
எண்ணிக்கையில் குறைவான இனத்திலே உதித்துக்
கண்ணியமாகக் கடமைகள் ஆற்றிய நாதன்....
நண்ணியே அவரை நாட்டின் தலைவனாய்ப்
பண்ணிய சிங்கையைப் பார்த்தே மகிழ்வாய்
மண்ணின் அளவில் சிறிதாக இருந்தாலும்
திண்ணமான சாதனைத் திறமைகள் மிளிரும்
விண்ணுலகம் என்பது மானிடர் வாழ்கின்ற
மண்ணில் தானன்றோ மலர்ந்து சிரிக்குது!
‘தம்மபதம்’ கூறுகிற புத்தரின் தத்துவச்
செம்மை நெறியினைச் சிரமேற் கொண்டு
வன்முறை ஒழித்து வரண்ட நிலங்களை
நன்செய் நிலமாக்க இதயச் சுத்தியுடன்
நம்மை நன்னெறியில் செம்மையாய்ப் பயிற்றிட
உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க
இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால்
அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள்!
போட்டி பொறாமை மன உழைச்சல் இல்லாத
வாட்டி வதைக்கும் வன்முறை அற்ற
ஆட்டிப் படைக்கும் அகந்தை ஒழிய ஆன்றோர்
காட்டிய வழியில் கருணை நெறியில்
ஈட்டிய செல்வங்கள் ஊறுபடாமல் புதுமை
காட்டிடும் கட்டொழுங்கு நல்லாட்சி நிலைக்க
தீட்டிடும் புத்தியைத் திடமான வெற்றிக்கு
ஊட்டுவோம் பலத்தைப் புதிய சந்ததிக்கே!
ஆசிய வட்டார நாடுகளில் தங்கி
பேசிடும் இன மத நல்லிணக்க மகிமையை
ஊசிமுனையில் உள்நுழைந்து வேரோடி
ஊடறுக்கும் பூசல்களை முளையிலே கிள்ளி
பேசிடும் ஒற்றுமை, சமாதானம் காத்து
பொறுப்புடன் நாட்டை நிர்வகிப்பதிலே
மாசில்லாத் திறனாளரை வருக’வென வரவேற்று
மாட்சிமையாய் ஆட்சியை மனதாரப் போற்றுவோம்!
ஆதியில் நாட்டில் இருந்தது போலவே
சாதிசமயப் பூசல்கள் இல்லாச் சகோதர
நீதிவழுவா நெறிமுறை பூண்ட புதுமையொன்று
மேதினியில் மீண்டும் வரவேண்டும் கட்டாயம்
மானிடத்தைப் பேணுகிற மனித விழுமியங்கள்
கானகத்தில் காய்ந்த நிலவாகப் போகாமல்
தானெடுத்துச் செல்லத் தராதரம் பெற்ற
நானிலமாம் இலங்கைக்கு இணையான நாடுமுண்டோ?.
முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின்
கதவைத் திறந்து தொழில்நுட்பம் பலவளர
நிதமும் நெடுஞ்சாலைப் போக்கு வரத்துகளும்
மிதமாக வடிவமைத்தால் மெச்சிடும் உலகமெலாம்
குதமாகப் பயிர் வளரும் குடிநீரும் கிடைத்துவிடும்
உதவாது என்று கைவிட்ட ஓரங்குலப்
பதமான நிலமும் பயன்பாட்டைக் காட்டுகையில்
இதமான இலங்கைக்கு இணையாக நாடுமுண்டோ?
வள்ளியம்மை சுப்பிரமணியம்.சிங்கப்பூர்.