Thursday, November 26, 2009

இன்னொரு மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009.....




"1959:- தோழர் வி.பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்ய+னிஸ்ட் கட்சிக் கிளைகள் கிராமம் தோறும் ஏற்படுத்துதல். இதற்கு பக்க பலமாக தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நின்று செயற்படுதல். கிராமங்கள் தோறும் ஜனசமூக நிலையங்களையும் பாரதி வாசிகசாலைகளையும் ஆரம்பிக்க ஊக்குவித்தல். இப்பணியைத் தொடர்ந்து கட்சிக் காரியாலயமும் படிப்பகமும் சுன்னாகத்தில் திறக்கப்பட்டன. இப்பணியில் தோழர்.எஸ்.ரி.என்.நாகரெத்தினம் சகல வழிகளிலும் உதவினார். படிப்பகத்தில் பத்திரிகைகளைப் பெறுவதற்குரிய நிதியுதவியை அன்று இலங்கை – சோவியத் நட்புறவுச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவராகவும் தாய்ச் சங்கத்தின் உபதலைவராகவும் கடமையாற்றிய திரு.வி.தர்மலிங்கம் வழங்கினார்."


நன்றி "பொன்மலர் 1994"




இன்னொரு  மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009. 


--------------------------------------

என் மறைவை விடைபெறும் நாளாய் இத்தால்

அறிவிக்க வேண்டுமென்று எண்ணி

முன்னேற்பாடாய்க் கையசைத்து விடைபெற்ற

காட்சியுள்ள புகைப்படத்தை

தன்னினிய தோழர்களிடம் கையளித்து

விடைபெற்ற மனிதநேயர் மணியம் ஆகும்.



இன,மத,சாதிய ஏற்றத்தாழ்வு களைந்து

மக்களின் ஒற்றுமை மலரட்டும் என்று

காங்கேயன் சீமெந்துக் கூட்டுத்தாபன

பொறியியல் பயிலுநராக இருந்தநீ

மனதைப் பாதிக்கும் உள்ளக உணவங்காடி

மனித உரிமையைப் பறிப்பது கண்டு

தன்மனப் போராட்ட உந்துதலால்

தொழிலையும் துறந்து வெளியேறினீரே!
 

50ம் ஆண்டுகளில்....மத சம்பிரதாயங்களை மறுத்தவர்

--------------------------------------------------------------------------------------------------

மணவாழ்விலும் வாழுங்காலத்திலும் இல்லத்தில்

நடந்த நிகழ்வுகளில் மதசம்பிரதாயங்கள்

கணப்பொழுதாவது நடைபெறக் கூடாதென

கவனமாகவும் கண்டிப்பாகவும் வாழ்ந்து-மனித

இணக்கத்தை வலுப்படுத்தும் இடதுசாரிக்

கொள்கைக்காய் குச்சொழுங்கை சந்துபொந்து

சுணக்கமின்றிச் சென்றடைந்து கிராமத்து மக்களின்

சுதந்திர உரிமைகளைச் சுயமாக உணர்த்தியவர்.




ஆலயப் பிரவேசம்.

---------------------------------

“சாதிஅமைப்புத் தகரட்டும், சமத்துவநீதி ஓங்கட்டும்

ஆதியில் இருந்துவந்த அடக்குமுறை ஒழியட்டும்” என்று

அறுபதுகளின் நடுவில் தன்பிறப்பிட ஆலயமாம்

மாவிட்டபுரக் கோவிலின் பிரவேசத்தை மனதாரக்

குறுக்கீடில்லாத் தோழர்கள் குழாத்துடன் வைத்தியர்

சீனிவாசகம், சூடாமணி, சுப்பையா, செந்திலென

போராட்டம் வளர்ந்து மட்டுவில், சங்கானை,

வேம்பிராய், புத்தூர் என்று வேகமாகப் பரவியதே!



மே தினம்---ஊர்வலம்

--------------------------------------

‘மே’ தினம் என்பது அமெரிக்க மண்ணில்....தொழிலாளர்

எட்டு மணித்தியால வேலைஉரிமைக்காய்

போராடி வென்றெடுத்த நாளே ’மே மாதம்’ முதல் நாளாகும்.

உலகமெங்கும் விடுமுறைநாள்..ஊர்வலங்கள்,கூட்டத்தில்....

வேரோடிய தொழிலாளர் விழிப்புணர்வு மிகுதியினால்...

ஆர்வமுடன் செங்கொடிகள் கைகளிலே தாங்கியோர்க்குத்

தலைமை தாங்கித் துணிச்சலுடன் புறப்பட்டாய்.

குண்டாந் தடியடிகள்....குறிபார்த்த துப்பாக்கிகள்..

எணணத்தில் உறுதிகொண்ட தோழர்களின் பலத்தால்,

மே தின ஊர்வலம் யாழ்-நகரைச் சுற்றியதே!


அடித்து உதைக்கப் பட்டும் எலும்புகள் நொருக்கப் பட்டும்

பிடித்து மிரட்டினாலும் பின்தள்ள முடியாத...

அடிமை விலங்கொடிக்க ஐக்கியமும் போராட்டமும்

குடிமக்கள் மனதிலே கொழுந்து விட்டெரியும்

ஆவேசம் தீரவில்லை அவலம் குறையவில்லை

ஆனமட்டும் சகல முற்போக்குச்  சக்திகளுடன்

கையோடு கைகோர்க்கும் கைங்கரியம் நடைபெற

தைரியமாய் இடதுசாரிகள் ஐக்கியம் உதிக்கச் செய்தாய்!



முன்னாளில் கெனமன், சரத் முத்தட்டு வேகம...பதுளை

முன்னணி வெற்றிபெறப் போனதுபோல் உன்னைநாடி

வநத பலருக்கு உறவானாய்....கருத்துப் பரிமாற்றம்
 
 
’தாயகம்’ இலக்கிய இதழைத் தோற்றுவித்தாய்!


---------------------------------------------------------------------------------

ஆண்டு எழுபதுகளின் ஆரம்பத்தில் அரசியலுடனே

பூண்ட இலக்கியமும் புதுமைபெற வேண்டுமென

வேண்டும் கலைஇலக்கியப் பேரவையைத் தோற்றுவித்து

தூண்டும் ஆசிரியத் தலையங்கம் தீட்டிநின்றாய்...

“தாயகம்” என்ற இலக்கிய இதழ்பிறந்து வளர்ந்தது.

தாயவள் நேசக்கரம் தன்னகத்தே கொண்டதனால்.....

முற்போக்குச் சிந்தைகொண்ட முனைவர்கள் வந்தார்கள்.

கற்றுப் பயன்பெறுவோர் கருத்தை எடுத்துரைத்தார்.




பேராசிரியர் கைலாசபதியின் தலைமையிலே

பாரதியார் பன்முகப் பார்வைத் தொடர்களில்...

சாரதிபோல் ரதம் செலுத்த அறிஞர்பலர் கூடினரே!

வேராக மறைந்திருந்தும் விழுதாயும் தாங்கினரே!

அரசியல் வாதிக்கு இலக்கிய ரசனையா?-எங்கிருநது?

‘’வரலாறு கூறுங்கள்” என்றுபலர் வினவினரே!’

“வி.பொன்னம்பலம்  தொடக்கம் - சண்முகதாசன் வரைக்கும் விளம்பினீரே!

 
 
இலக்கியவாதியாகவும் இயங்கினார்.


--------------------------------------------------------------

வொல்கவிலிருந்து கங்கைவரை.....பகவத்சிங் தொடக்கம்

நம்பூதிரிபாத் வரை--ஜீவானந்தம் தொடக்கம்-ஜெயகாந்தன்வரை

கார்ல்மார்க்ஸ் தொடக்கம்--மார்க்ஸிம் கோர்க்கி வரை-அதற்கு முன்

கம்பன் தொடக்கம்-வள்ளுவன் வரை பாரதி தொடக்கம்-பாரதி தாசன் வரை

கம்பனை வளர்த்த சடையப்ப வள்ளலை குறிக்கும்,

கம்பன் பாடிய பாடலையே தன்வீட்டுப் பாடலாக........

“அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்.......”

அந்தக் காலத்தில் கணனி-இணையம் இல்லாததால்...

இந்த உண்மைகள் வெளியுலக வெளிச்சத்திற்கு வரவில்லை!



அரசியல் எதிரிக்கும் அடைகலம் கொடுத்த அன்பன்.

-------------------------------------------------------------------------------------------

எண்பதுகளின் ஆரம்பத்தில் மனிதம் மரணிக்க.....

எண்ணற்ற வானூர்திகள் எடுத்துவீசிய பொருட்களும்

அள்ளும் ஆர்வலர்களின் மேளதாள வரிசைகளும்...

மக்கள் கூட்டமும் மலர்மாலைப் பொதிகளும்...

மேலாதிக்க வல்லரசின் மேலோட்டம் விழுந்ததால்...

“தேசியத்துள் நுழைதல் தேவையில்லை” என்று...

முதற்குரல் கொடுத்த முத்தமிழன் நீதான்!

இக்கருத்தை மறுதலித்த பத்திரிகை ந்ண்பன்

இல்லந்தேடி அடைகலம் கோர உன்னிடம் வந்தபோது..

‘”அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்”

உடையவனாய் மிளிர்ந்தவன் மனிதமணியமே!
 
 
நிர்ப்பந்தமாய் ஊர் துறந்தாய்.


-------------------------------------------------------

அரசியல் தெளிவற்ற ஆட்கொலைஞர் உன்கருத்தை....

விரசமாய் விதைத்தபோது நிர்ப்பந்தமாய் ஊர்துறந்தாய் !

அதிகார வர்க்கமும் மாறிக்கொண்டே இருக்க...

அரிதாரம் பூசுவோரும் நிறங்களை மாற்றினர்.....

பதிவில் பலகதைகளுக்குச் சுருதியைக் கூட்டினர்.

உன்னைத் துரத்திய துப்பாக்கிகள் மாறின...

மதித்தவர் பலர் உன்னுடன் இருந்ததால்.....-நீயோ

துப்பாக்கிகளுடன் ஒத்துப்போக விரும்பவுமில்லை !



கண்டி வைத்தியசாலையில் இறுதி மூச்சு !

-------------------------------------------------------------------------

மனிதத் தேய்வு மலிந்து நீர்தேங்கிய இடங்களில்

பாசி பிடித்ததுபோல் இடப்பெயர்வு - புலம்பெயர்வு....

தனியத் தமிழன்....அவதிகள்...”அகதிகள்” என்ற

புனிதப் பெயரால் அழைக்கப் பட்டான்.

மனித இனமே மந்தைகளாயினர் ஏனென்று கேட்காமல்...

பின்னாலே ஓடுகிற பின்னடைவு வந்ததனால............!

எண்பதின் இறுதியில நீ விடைபெற்ற வேளையில்...

உன் உடம்பில்................!

‘தங்கொல்லை” முஸ்லீம் சகோதரியின் வீட்டுணவும்,

கண்டி வைத்தியசாலை பெளத்த பிக்குவின் குருதியுமே.....

தேசியம் உனக்குள் இருக்க; தேசம் உன்னை இழந்தது !
 
 
இறுதிப் பயணம்.
 
-----------------------------
ஊர்வலங்களைத் தடைசெய்யும் இராணுவக் காலத்தில்

சீர்பெறு செம்பதாதைகள் உயர்ந்து நிற்க....

ஏராளமான புத்தகப்பூக்களின் நடுவில் கண்மூடியபடி...

பெயரான ‘பொய்யாமொழி’ யின் உடலைச் சுற்றி

பாராளும் பலதோழர்கள் கைகளிலே செங்கொடிபறக்க.....-கண்

நீரால் வாழ்த்தி விடைகொடுக்கும் தோழமை,உறவுகள்

உன்னை அனுப்பி வைத்தோம். நீ வளர்த்த தேசியமும்

உன்கனவை நனவாக்க கண் விழித்தபடி இருக்கிறது. !



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF