தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு
காலில் வீக்கத்துடன் அந்தக் காலை லேசாக தடவிக்கொடுத்தவாறே திண்ணையில் உள்ள சாய்மனைக்கட்டிலிலிருந்து இடதுசாரிச் சிந்தனை அடிப்படைகளை கோரோசனைக் குழிசையை சிரட்டையில் உரைத்துப் பக்குவத்துடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம் கிராமத்து வைத்தியர்போல அவர் அருகே இருந்து பாடம் கேட்ட 1983 கால நாட்களை இன்று நினைவுகூர்கிறேன்.
தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் 1969 இல்
இடையிடையே எழும்பி முற்றத்தில் நடக்கும் பாவனையிலும்கூட மூலதனத்தினதும் தனிச்சொத்துடமையினதும் அரசினதும் உழைப்பாளர் வர்க்கத்தினதும் இனவேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படவேண்டிய தவிர்க்கவியலாத நியதிபற்றி ஆசான் மணியத்தாரிடம் அப்போது பாடம் கேட்டதை இப்பொழுது நினைவுகூர்கிறேன்
கீறாத,கிறுக்கிக் கசக்கிவைக்காத காகிதமாக அப்போது நாங்கள் இருந்தோம். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச்செயலாளராக இருந்தார். அவ்வப்போதான உரையாடல்களின் வழியே இன்றுவரை என்னிடம் தொடரும் வர்க்க சாதிய போராட்ட அடிப்படைகள் அவரிடம் இருந்து முதிசமாக எனக்குக் கிடைத்தவைகளே.
தமிழில் வெளிவந்த சீன - சோவியத் இலக்கியங்களை எனக்கு கனிவோடு அளித்த ஒளியும் அறிவும் விவேகமும் நிறைந்த அந்த முகம் நினைவில் இப்போது அபூர்வமாகவும் அதிசயமாகவும் மாறிவிட்டது. நாம் மறுத்தபோதும் துப்பாக்கிகளைத் தருவதற்கு எல்லோரும் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.
தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அவரின் அன்றைய நெறிப்படுத்துதல்களே இன்றுவரை வன்முறையற்ற வடிவங்களில் எம்மை நடத்திவருகிறது.
தீண்டாமை எதிர்ப்புப்போராட்டத்தின் போது தோழர் மணியம் அவர்கள் முன்னணியில் நின்று போராடியதிலும், அப்போது பொலிஸாரின் வன்முறையிலும் தடியடியிலும் தாக்கப்பட்டதிலும் தொல்புரத்தில் தலித்துகளிற்கான குடிநீர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்மாதிரியிலும் அவரின் நினைவு இன்றுவரை தொடர்கிறது.
'வெய்யிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும்' என்பது அவர் போன்ற பெரும் ஆளுமைகள் மறைவின்பின் இன்று வெறுமையாகவே தெரிகிறது. புலிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார். எப்போதும் செயற்படாதவாறு அவர் முடக்கப்பட்டார்.
ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளின்போது அவர் மகனும் எனது தோழனுமான 'மீரான் மாஸ்ரர்' அவர்களோடு கடைசியாக அவர்கள் வீட்டிற்குப்போய் அம்மாவின் கையால் கொழுக்கட்டையும் மோதகமும் சாப்பிட்டபின்னர் அவர் வீட்டிற்கு இன்றுவரை போகவில்லை.
இப்போது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் மிஞ்சியிருப்பது...மணியத்தார் இருந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்.
சுகன்
Monday, October 12, 2009
"நிச்சாமம்" இணையத் தளத்தில் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்