Monday, September 27, 2010

தோழமையின் தடம் நினைவு பேருரை-கனடா:- தோழர் சி.கா.செந்திவேல் (இலங்கை )

தோழமையின் தடம் நினைவு பேருரை:-  
தோழர் சி.கா.செந்திவேல்(இலங்கை ) இடம்:-Scarborough Village Rc 3600 Kingston Road/ Markham காலம்:- 02-10 -2010 சனிக்கிழமை 4.30 மணிக்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

தேடகம் தமிழர் வகைதுறைவள நிலையம் -கனடா
தொடர்புகளுக்கு 416 840 7335

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர் நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நினைவு பேருரை.
 
 
நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர்  சிவம்) அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. 
 
பின்னர்  தேசிய கலை இலக்கியப்பேரவை, தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியவர். 
 
நன்றி “இனியொரு

Sunday, September 26, 2010

*என்னருகே நீ இருந்தால்........! வள்ளியம்மை சுப்பிரமணியம்

*என்னருகே நீ இருந்தால்........!
--------------------------------------------
தாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.
    தாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....!
வாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்
    ஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்
நோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........!
     சாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்
தோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்
     தேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.
 
**காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்
    சூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்
பேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......
    நீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....
பாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...
   சீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....
வேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்
வேராக நீயிருந்து வீரம் தந்தாய்! 
 
அந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்
  குன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்
என்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...
   என்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...?
உன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான
   பொன்மொழிகள்,கவிதைகள், போற்றும் தியானங்கள்....
என்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....
    என்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே!
 
*இம் மாதம் 13-09-2010   திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை
2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு
ஊற்றாகியது. சிங்கப்பூர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.
 
**கவிப்பேரரசு- வைரமுத்து அவர்களின் ’தமிழுக்கும்  நிறம் உண்டு”
என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு பொன் வரிகள்.

Thursday, September 16, 2010

மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, நீ தியாக தீபமானாய்!........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் கவிதை!!

மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகி  திலீபா, நீ தியாக தீபமானாய்!........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும்  கவிதை!!






தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபன் பற்றி 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கவிதை.
-----------------------------------------------------


உண்ணா விரதம் என்பது உண்மையில்....
எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்ததென்று.......
காந்திமகானின் கருணை வழியினிலே......
சாந்தியளிக்கும் சமாதானம் பிறக்குமென்று




மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் நீ பழகி-”நமக்குள்
வேற்றுமை இருந்தால்--விரியுமே எதிரி பலம்
ஆற்றுப் படுத்துவோம், ஆதரவாய்க் கைகொடுப்போம்......”என்று கூறி
தோற்றுப் போனதால்தான்*, துணிந்தாயோ உயிர்துறக்க?




“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்று
அடுத்துவரும் சந்ததிகள் ஐக்கியத்தைப் பேணிநிற்க....
மாற்று இயக்கங்கூட தமிழின விடுதலைக்காய்.....
வீற்றிருக்க வேண்டுமென விட்டாயோ உன்மூச்சை?




சோற்றுப் பருக்கையல்ல: சொட்டுத் தண்ணீரே அருந்தாமல்.....
வேற்று மனிதனாகி வெளிக்கிட்டு ஓடாமல்.......
காற்றிலே மிதந்துலாவும் கருணைச் சுவாசமே......!
போற்றும் தியாகத்தால் திலீபா நீ தீபமானாய்..!




இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்....
இனத்தின் ஐக்கியமே நீ கண்ட கனவப்பா!
வனத்தின் நிலவாக வாய்ப்பற்றுப் போகாமல்.....
உனக்கும் ஆத்மசாந்தி ஒற்றுமையில் கிடைக்குமப்பா!






பார்த்திபன் இராசையா ( மலர்வு கார்த்திகை 27, 1963 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட  திலீபன்  இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.

ஐந்து அம்சக் கோரிக்கை

   1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
   2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
   3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
   4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
   5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

1987 புரட்டாதி 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1987ஆம் ஆண்டு புரட்டாதி 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு  திலீபன் தியாக மரணம் எய்தினார்.




*தியாகி திலீபன், 1985/86 இல்  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக  இருந்த அமரர் விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் வோடு மிகுந்த மதிப்பு, நட்பு பாராட்டுகிறவர்.- சத்தியராஜன் 26-09-1989.

Friday, September 10, 2010

நான் பிறந்த நாடு......வள்ளியம்மை சுப்பிரமணியம்


நான் பிறந்த நாடு
-------------------------------
நான்பிறந்த நாடுஎன்று நானிங்கு எழுதுவது.....
நான்பிறந்து வளர்ந்த மாகாணத் தொகுதியைத்தான். ....
ஊர்பற்றி எழுதும்படி உரிமையுடன் கேட்டீர்செந்தில்
ஏர்  உழுத பறாளாய் மண்ணின் எழில்மிகுந்த அழகுதன்னை....
பேர் பெற்ற ஆலயங்கள் பெருமையுறு வரலாறு....
யார் மறக்க முடியுமய்யா யாழ்ப்பாணச் சிறப்பதனை....?
மங்காத இராமாயண நாயகன் ஸ்ரீராமனின்
தங்கத் திருப்பாதம் பட்டதாம் திருவடி நிலையில்
சங்கமித்ரை பெயர்கொண்ட அசோகமன்னன் புத்திரியும்
சம்பில்துறை வந்திறங்கி சமயம் வளர்த்தகதை.....
சின்னத் தம்பிப் புலவர்கூட சிந்துகவி பாடிவைத்த
எந்நாளும் அழியாத பறாளாய் விநாயகர் பள்ளு.....
கூர்ம வடிவத்திலே கோவில்கொண்ட பொன்னாலையில்
தேர்த்திரு விழாவில் உறியடி உற்சவமும்..........
தயிர்முட்டி சிதறித் தலைமேலே கொட்டியதும்....
பயிர் விளைந்த வயல்வெளியின் பசுமைக் காட்சிகளும்....
வானம் பார்த்த பூமியென்று பேரெடுத்து இருந்தாலும்...
கூன்விழுந்த பின்னாலும் உழைத்துண்னும் உற்சாகம்....
வீட்டுக்கொரு கிணறு... வீதிதோறும் வேலி+மதில்...
பாட்டாகத் திருவாசகம் மார்கழித் திருவெம்பாவில்....
மின்விசிறி  தேவையில்லை வேப்பமரக் காற்றுவரும்.
பன்னாட்டு உணவு வேண்டாம் பனைமரமே பசிதீர்க்கும்.
யாழ்பாடிப் பரிசுபெற்ற யாழ்ப்பா வரலாறு....
பாழ்போகா உணவுமுறை  பனம்பழத்தில் கிடைக்கின்ற
ஒடியல்கூழ், பனங்கட்டி, ஒடித்துண்ணும் புழுக்கொடியல்,
மடித்தெடுத்துப் பேணிவைக்கும் பனாட்டுத் தட்டுகளும்
பதநீருள் பயறு போட்டுப் பக்குவமாய்க் காய்ச்சுகின்ற
இதமான கருப்பங்கஞ்சி.... இப்போதும் வாயினிக்கும்....
குலையாக வெட்டிக் கோவில் பந்தலிலே கட்டுகிற
விலைக்கும் கிடைக்காது விருப்பமான நுங்குகளாம்.
இலுப்பைப் பூக்காயவைத்து அல்லிதட்டி வறுத்தபின்னே
அலுக்காது உரலிலிட்டு உலைகையால் இடித்தெடுத்து...
சூட்டோடு பரிமாறிப் பலரோடு உண்டகதை....
பாட்டாகச் சொன்னால் புரியாது புதியவர்க்கு....
பிறந்ததும் வளர்ந்ததும் அறநெறிகள் கற்றதும்....
துறந்தது பிறந்த மண்ணைத் துக்கமே மகிழ்ச்சியில்லை!


வள்ளியம்மை சுப்பிரமணியம்

Saturday, September 4, 2010

பிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .....ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி! சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!

திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள் 05 09 2010.
             ............
      இலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில்
     துலங்கும் வட்டுக் கோட்டைத் தொகுதியில்
     நீர்வளமும் நிலவளமும் உயர்ந்த பனைமரமும்
     போர் வளமும்  சூழ்ந்த பதற்றமான காலத்தில்
    “சுபாரா” பெயருடன் வந்து பிறந்த வரமிவர்.
    அபார வரலாற்றைக் கொண்ட ”சத்திய மனை” யின்
    அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று
    தப்பாது அன்புகாட்டும் அயலோர் உறவுகளும்...
    நாட்டு நிலைமையால் தமிழ்நாடு சென்று
    காட்டும் முன்னேற்றம் கல்வியில் தானென்று
    இளம்வயதில் மறைந்த பெரிய மாமாவின்
    உளம் நிறைந்த  கனவை நனவாக்க
    அமேரிக்க பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற
    உண்மைப் பேற்றினைப் பெற்ற செல்வியாம்.
 
ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி!
சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!
வள்ளியம்மை சுப்பிரமணியம்






From Sunday "Thinakkural" 13 February 2005
 
          

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF