"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, February 25, 2011

மானிடத்தின் மகிழ்வில் உணர்வு கொள்வாய்!

மானிடத்தின் மகிழ்வில் உணர்வு கொள்வாய்!
---------------------------
சொந்தப் பலத்தைத் தொலைத்து நிற்கும் தோழனே....!
வந்தோம் பூமிக்கு....வாழ்ந்துதான் காட்டுவமே....!
 
முட்டையிடும் பருவத்தில் கூடுகட்டும் குருவிகண்டாய் !
இட்டமுடன் மாரிகாலம் இனத்தோடு வாழ்வதற்கு.....
திட்டமுடன் புற்றெடுக்கும் கறையானைக் கவனித்தாய் !
உட்கருத்தை ஏற்று நீ உற்சாக உணர்வு கொள்வாய்.!
 
வட்டவட்டக் கண்கள் வைத்து வளர்பிறை காலத்திலே
எட்டாத உயரத்தில் தேனீக்கள் கூடு கண்டாய்....
அட்டதிக்கும் உன்மதிப்பை அன்பர்கள் மெச்சிடவே....
கட்டளையை நீ வகுத்துக் காலத்தால் உணர்வு கொள்வாய்!
 
ஊனமுற்றோர் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகண்டாய்
கானமிசைக்கும் கண்பார்வை அற்றோர் பாடல்கேட்டாய்
சோர்வகற்று ! சுறுசுறுப்பை உன்னகத்தே கொண்டுவந்தால்... !
மார்பழகா!....மானிடத்தின் மகிழ்வில் உணர்வு கொள்வாய்!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Thursday, February 24, 2011

இராம.வயிரவன் கவிதைக் குழந்தைகள்.

இராம.வயிரவன்- கவிதைக் குழந்தைகள்.
------------------------------------------
 


காலத்தின் கட்டாயம் கருத்தில் எழுந்ததனால்
ஞாலத்தில் தன்பங்கும் நியாயமாய் உண்டென்று....
இராம--வைரவனார் எழுதிவெளிட்ட அந்த
காராம் பசுவான “ கவிதை குழந்தைகள்” கருவூலம்....! கருவூலம் !!
 
குழந்தைமுதல் பெரியோர்வரை குளிரவைத்தார் வார்த்தைகளால்
மழலைக்கு மட்டுமல்ல; மானிட வர்க்கத்துக்கே....
பழமையிலும் புதுமைகண்டு....புதுமையிலும் புகுதிறத்தில்
அழகாக யாத்துத் தந்தார்....கவிக் குழவி  வயிரவனார் !
 
                                        வேறு
                                       -----------
முகத்திலொரு புன்சிரிப்பு அகத்திலொரு அமைதி
செயல், திறன்கள்  செய்துவிட்டு சிறுவன்போல் வீற்றிருப்பார்.
அத்தனையும் தன்னடக்கம், மொத்தத்தில் அன்னம்போல்
பாலுக்கும், நீருக்கும்....பகுத்துணரும் பாங்கினனாம்!
 
அன்புடன்.......அம்மா....வள்ளியம்மை சுப்பிரமணியம்.
 
சிங்கப்பூரில் கணிப்பொறித் துறைப் பணியிலிருக்கும்  இவருடைய சிறுகதைகள் மற்றும் கவிதைகள் இந்திய, சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் இதழ்களிலும், இணைய இதழ்களிலும் நிறைய வெளியாகி இருக்கிறது. இவருடைய  கவிதைகள்  மற்றும் சிறுகதைகள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பரிசைப் பெற்றிருக்கிறது. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் போன்றவற்றில் பங்கேற்றிருக்கும் இவர் சிங்கப்பூர் வானொலியான ஒலி 96.8 நடத்தியுள்ள கவியரங்கத்தில் பல முறை பங்கேற்றிருக்கிறார்.

 

Wednesday, February 23, 2011

மக்களுடன் வாழ்ந்த மாதரசி அன்புச் சகோதரி பார்வதி அம்மா-வள்ளியம்மை சுப்பிரமணியம்

மக்களுடன் வாழ்ந்த மாதரசி அன்புச் சகோதரி பார்வதி அம்மா
------------------------------------------------
கன்றைவிட்டுப் பசுஅகலாக் கதைகள் படித்ததுண்டு.....
கன்றுகள் தாயைக் கதறவைத்துப் பறந்தகதை......
ஒன்றொன்றாய்ச் சொன்னாலும் ஓராயிரம் நாள்வேணும்.
நன்றான இல்லறத்தில் நானுனக்கோர் தங்கையம்மா!
 
உனக்கு....
 
புலம்பெயர்ந்த தமிழரெல்லாம் புகழாரம் சூட்டுகையில்
வலமிடமாய்ச் சுற்றிவந்து வாய்க்கரிசி வேண்டாமே!
குலமகளே!  குணக்குன்றே !...கோலங்கள் மாறினாலும்
பலமாக மகனோடு வாழ்ந்தவாழ்வு அர்த்தங்கள் நிறைந்ததம்மா.
வள்ளியம்மை சுப்பிரமணியம்

Sunday, February 13, 2011

முள் மகுடம் - வள்ளியம்மை சுப்பிரமணியம்.

முள் மகுடம்
                                  -------------------------
அளவுக்கு மிஞ்சிய அதிகமான வருவாய்
பிளவான எண்ணத்தில் பிற்காலச் சந்ததிக்கு
களவாக வெளிநாட்டு வங்கிக் கணக்கினிலே
உளவறியா வண்ணம் பணத்தைப் போட்டு வைத்தார்.
 
நாட்டை முன்னேற்ற நலிந்தோர்க்குக் கைகொடுக்க
வாட்டுகின்ற கொடூர வறுமையை ஒழித்துவிட
ஆட்டிப் படைக்கின்ற அசையாத அப்பணத்தை
மீட்டெடுத்துத் தாய்நாட்டை மேல்நிலைக்கு உயர்த்திவிட.....
 
செத்தொழிந்து போனபின்னும் சேமிப்பு பிள்ளைகட்கு
மொத்தமாகப் பெருகுமென்ற மோசமான கற்பனைகள்.....
அத்தனையும் தவிடுபொடி அரசாங்கப் புலனாய்வு.....
மொத்தமாகச் செயற்பட முழுப்பணமும் தாய்நாட்டில் !
 
வெளிநாட்டு வங்கியிலே வீணாகும் பணமதனை
வெளிக்கொணர்ந்து தாய்மண்ணின் மேம்பாடு செழிக்குமென்றால்....
ஒளிவழியில்  பார்க்குமவர் ஒளியிழந்த பொம்மையானார்
பழிப்பான முள்மகுடம் இதுவென்று உணருவரோ?
 
 
        வள்ளியம்மை சுப்பிரமணியம்.