"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, March 5, 1971

An incident in China ... during the trip in 1963. Written by K.A. Subramaniam

Comrade Subramaniam seen with Comrade Chen Yi  during his trip with Comrade D.B. Alwis to the People's Republic of China in 1963.  Comrade Chen Yi  was the vice premier from 1954 to 1972 and foreign minister from 1958 to 1972 and president of the China Foreign Affairs University from 1961 to 1969. https://en.wikipedia.org/wiki/Chen_Yi_(marshal)



சீனாவில் ஒரு சம்பவம் ...... கே.ஏ. சுப்பிரமணியம்


(செயலாளர் கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு வாலிபர் சங்கம் யாழ் பிரதேச கிளை) 

சீனப்புரட்சி தினத்தையொட்டி ‘தொழிலாளி’ விசேஷச மலராக வெளிவருகிறது. அதற்கு ஒரு கட்டுரை வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் சீனாவில் கண்ட, தெரிந்து கொண்ட விஷயங்கள்-பெற்ற அனுபவங்கள் எவ்வளவோ. எல்லாவற்றையும் இக்கட்டுரையில் சுருக்கிக் கொள்ள முடியாது. முடிந்தவரை என் அனுபவங்களை தொடர்ந்து எழுத முடிவு செய்துள்ளேன். இக்கட்டுரையில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே எழுதுகிறேன்.

சீனாவைப் பற்றிய பேச்சு இன்று உலகில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளர்ந்து வரும் ஜன பெருக்கத்தை சமாளிக்க முடியாத சீன அரசாங்கம் யுத்த முஸ்தீபுகளில் இறங்கி மக்களின் எண்ணத்தை திசை திருப்பி வருகின்றது, என்று பத்திரிகைகளும் வானொலிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக நமது அண்டை நாடான இந்தியா இப்பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றது.

சீனாவில் விவசாயம் அமைப்பு முறை (கம்யூன்கள்)தொழில் உற்பத்திமுறை- வளர்ந்து வரும் ஜனப்பெருக்கம் இவற்றால் தான் அங்கு வறுமை-பசி-பட்டினி-சாவு- சர்வாதிகாரம் நிலவுகிறது என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் சீனாவில் சீனாவிற்கு எதிராக உச்சக்கட்டத்தை அடைந்துள்ள அச்சந்தர்ப்பத்தில் தான் ஜூன் மாத நடுப்பகுதியில் சீனாவிற்கு விஜயம் செய்தேன். அங்கு ஆறு வாரங்கள் வரை தங்கி தொழில் கேந்திர நகரங்களையும், விவசாயப் பண்ணைகளையும், கல்வி நிலையங்களையும், கலாச்சார மன்றங்களையும், தொழிலாளர்களினதும், கிராமப்புறங்களினதும் வாழ்க்கை-நிலைமையையும் மற்றும் பல விஷயங்களையும் நேரடியாக தெரிந்து கொண்டேன்.

அதே காலத்தில் சீனாவிற்கும் வந்திருந்த வெளியூர் தூது கோஷ்டிகள் பத்திரிக்கை நிருபர்கள், ஸ்தானிகராலய பிரமுகர்கள் ஆகியவர்களுடன் கலந்துரையாடியதன் மூலம் சீனாவை பற்றி இன்னும் பல உண்மைகளையும் அனுபவங்களையும் பெறக்கூடியதாக இருந்தது.

எதிரிகளின் சீனாவைப் பற்றிய பொய்ப்பிரச்சாரம் வேகத்தில் சிக்கி நான் கூட சீனா அவ்வளவாக முன்னேறவில்லை முன்னேறியிருக்கவே- 59, 60, 61ம் ஆண்டுகளில் அங்கு இயற்கை கோளாறுகளால் விளைச்சல்கள் விளைச்சலுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டு இருந்தது. தனியனாக நின்று சீனா எப்படி முன்னேறும்? என்றெல்லாம் நினைத்து சீனாவின் மகத்தான முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிட்டு தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். ஆனால் அங்கு நான் கண்டதும் தெரிந்து கொண்டதும் முற்றிலும் மாறானது. சீனா மிக மிக முன்னேறி வருகிறது’ இந்த கருத்தை அங்கு வந்திருந்த தூது கோஷ்டிகளும் கொண்டிருந்தன. அவர்களில் சிலர் இரண்டாவது தடவையாக விஜயம் செய்தவர்களாகவும் மேற்கத்திய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்ட அறிந்தவர்களாகவும் இருந்தனர். இவர்களில் சிலருடன் நாங்கள் பேசும் வாய்ப்பும் எங்கள் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் நாம் அங்குள்ள நிலைமைகளை தெரிந்துகொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகள் எப்படி யானவை என்று சொல்வதற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறுகிறேன். 

சீன மக்களிடையே வறுமை பற்றாக்குறை இருக்கின்றதா? அதனை எப்படி தெரிந்து கொள்ளலாம்? இது இங்கிருந்து போகும் பொழுதே என் முன் எழுந்த கேள்விகள். சிந்தனை செய்த நான் ஒரு முடிவிற்கு வந்து, முடிந்தவரை கிராமங்களுக்கும் தொழிலாளர் வீட்டு புறங்களுக்கும் போக வேண்டும். அங்கு அவர்களது வீடுகளில் சுற்றுப்புறங்களில் குடும்ப சண்டைகள் நடக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும் என எண்ணினேன். மொழி விளங்காவிட்டாலும் பலத்த சத்தம் போட்டு கணவன் மனைவி சண்டை போட்டால் அது பற்றாக்குறைகளுக்காக தானே இருக்க முடியும் என்பது என்பது எனது கணிப்பு. இதனை என்னுடன் வந்திருந்த தோழர் அல்வேஸ் அவர்களிடமும் கூறினேன்.


சீன தேசம் சென்ற நாள் முதல் திரும்பும் நாள் வரை முடிந்தளவு கிராமப்புறத்து வீடுகளுக்கும் தொழிலாளர் வீடுகளுக்கும் போனோம். சில சமயங்களில் வேறு எங்காவது போய் கொண்டிருக்கும் சமயம் திடீரென காரை நிறுத்தி அந்த வீடுகளுக்கு போவோம் அங்கு அவர்களுடன் கதைப்போம்-விசாரிப்போம். வீட்டில் எத்தனை பேர் என்று கேட்போம். அவர்கள் உணவு வகைகளை கேட்போம். உடைகளை கவனிப்போம்-எங்கும் மிகவும் சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். கம்யூன்கள் தான் தங்களை காப்பாற்றியது என்று பெருமை கொள்கிறார்கள். ஆண்கள் கம்யூன்கள் அவர்கள் வாழ்வில் வெற்றி தேடிக் கொடுத்திருக்கின்றது. கோவா, கத்திரி, தக்காளி போன்ற காய்கறிகள் ஒரு இறாத்தல் அரை சதத்திற்கு விற்கப்படுகின்றன. பழ வகைகள் மீன் முட்டை இறைச்சி போதிய அளவு வாங்க முடியும் அதுவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. 

கம்யூன்கள், காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை மாத்திரம் உற்பத்தி செய்யவில்லை. வீதி அமைத்தல், நகர நிர்மாணம், நீர் பாசன வசதி செய்தல், விவசாயத்திற்கு அனுசரணையான சிறு கைத்தொழில்களையும் செய்து வருகிறார்கள். கம்யூன்களில் விளையாட்டு அரங்கங்கள், ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கலை கலாச்சார மன்றங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிர்வாகத்தை கவனிப்பதற்கும் கம்யூன் விவசாயிகள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். விளங்கக்கூடிய வார்த்தையில் சொல்லப்போனால் சொல்லப்போனால் சீனாவில் ஒவ்வொரு கம்யூன்னும் ஒவ்வொரு கிராம ஆட்சியாக அமைந்துள்ளது என்று கூறலாம். 1962ஆம் 63 ஆம் ஆண்டில் நாட்டில் பெருவாரியான உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டதோடு கால்நடைப் பண்ணைகளும் பெருமளவில் வளர்ந்தன. இப்போது பருத்தி உற்பத்தியிலும் விவசாயத்தில் நவீன சாதனங்களை பயன்படுத்துவதிலும் சீனர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

1959, 60 61ம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளில் சீன மக்கள் வெளிநாடுகளில் ஒரு சதத்திற்காவது கேட்க இல்லை. தமது உழைப்பின் சக்தியாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான வழிகாட்டுதலும் வெற்றி கண்டார்கள். தொழில் பெருக்கத்தை குறிப்பிட வேண்டுமானால் 1958- 63 ஆண்டிற்கான 5 ஆண்டு திட்டத்தை மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றினார்கள்.

கிராமப்புற மக்களிடம் தொழிலாளர்களிடமும் நேரடியாக இவற்றை என்னால் அறிந்து கொள்ள முடிந்ததே தவிர குடும்ப சண்டையையோ அதற்கான அறிகுறியையோ எங்குமே நான் காணவில்லை. 

கடைசிநாள் தாயகம் திரும்ப பீஜிங்கில் இருந்து விமானம் மூலம் கன்ரனுக்கு (Guangzhou) பிரயாணமானோம். சிறிது தூரம் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது. கன்ரன் ஸ்டேஷனிலிருந்து பிரயாணம் ஆகி ஒரு ஸ்டேஷனில் இறங்கி நானும் தோழர் அல்வேஸ்ம் சீன தோழர்கள் மூவரும் கதைத்து சிரித்தபடி அடுத்த இரயிலில் ஏறுவதற்கு சிறிது நேரம் நடக்கிறோம். பிளாட்பாரத்தில் ஒரு சீனர் வியர்வை சிந்த தோழில் தடி மீது இரு பக்கமும் கடும் பாரம் சுமந்து வருகிறார். ஒரு மனுஷி அவரிடம் போய் ஏதோ கதைக்கின்றார். அவர் தனது சட்டைப்பையில் இருந்து காசு நோட்டு ஏதோ எடுத்துக் கொடுக்கிறார். அப்பாடா! அந்த மனுஷி பத்திரகாளி போல் நின்றார். காசை சுருட்டி எறிந்தார். பலத்த சத்தம் வைத்து ஏதோ பேசினார். உடனே அவர் பாரத்தை அப்படியே போட்டுவிட்டு மனுஷியை அடிக்க போனார். நான் திகைத்து விட்டேன். நடக்கக்கூடாத சம்பவம். சீனாவில் நான் தங்கிய இத்தனை நாட்களும் முயற்சித்துப் பார்த்தும் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்தது. என் மனம் அந்தரப்படுகிறது. சீ! இதென்ன! சீனாவில் இன்னும் பிரச்சனைகள் இருக்கின்றனவா! ம்! சீ! ஒரே சிந்தனை. என் மனம் ஆறுதல் கூற முற்படுகிறது. சீனம் 65 கோடி மக்களைக் கொண்ட நாடு. 14 ஆண்டுகளுக்குள் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க முடியுமா? இன்னும் காலம் வேண்டும் என்றெல்லாம் என் மனம் ஆறுதல் கூற முற்படுகிறது. மனம் கேட்கவில்லை. மனதுள் ஒரே போராட்டம். தோழர் அஸ்விஸ் அவர்களுக்கு கூறினேன் “தோழர் பார்தீரா சண்டையை, இன்னும் நிலைமை சரி இல்லை” என்று கூறி முடிப்பதற்குள் இடைமறித்து தோழர் அல்வேஸ் “நாம் எங்கிருக்கின்றோம் பார்தீரா” என்று கேட்டார். நிமிர்ந்து பார்த்தேன் அது ஹாங் கொங்! ( Hong Kong). ஹாங் கொங் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து வரும் பிரதேசம். இந்தச் சம்பவம் அவர்களுடைய ஆதிக்கத்திலுள்ள எல்லையில் தான் நடந்தது. 


இது கூகிள் தமிழ் குரல் தட்டச்சு எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு.  மெய்ப்புப் பார்த்து தமிழ் குரல் தட்டச்சு மூலம் எழுத்து திருத்தியது செல்வி பாரத பிரியா தட்சிணாமூர்த்தி. 14-07-2020



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்