Saturday, December 5, 2009

பொதுவுடைமைவாதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்: வெகுஜனன்

மனிதர்களின் சமூகச் சூழல் தான் அவர்களது சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்பது மாக்சிச உலக நோக்கின் அரிச் சுவடியாகும். நமது தமிழ்ச் சூழலானது பழைமை மரபு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவற்றாலும் சாதியப்படிநிலை அமைப்பு முறையாலும் இறுக்கமுடையதாக இருந்து வந்திருக்கிறது. இன்றும் இவற்றின் தொடர்ச்சி வெவ்வேறு அளவுகளிலும் நிலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றின் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த நிலைகளிலும் பேணப்படுகின்றன.


இவை பற்றிய கேள்விகளும் மாற்றுச் சிந்தனைகளும் மீறல்களும் சமூகத்தில் மேற்கிளம்புவது குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றன. அவ்வாறு புதிய சிந்தனைப் போக்குகள் வெளிவருவதையும் அவற்றின் தாக்கங்கள் சமூகத்திற்குச் சென்றடைவதையும் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்துவரும் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் தடுத்து மறிக்கின்றன. இவற்றையெல்லாம் மாக்சிக உலக நோக்கின் அடிப்படையில் புதிய கருத்தியல் சிந்தனை நடைமுறைக்காக முன்னெடுத்தவர்கள் பொதுவுடைமைச் செயற்பாட்டாளர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்த அனைத்து பிற்போக்குத் தனங்களையும் மீறல்களால் எதிர்த்துப் போராடி வந்த வந்தவர்ளும் பொதுவுடைமைவாதிகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

அவ்வாறான பொதுவுடைமை வாதிகளில் முன்னோடியாக வாழ்ந்து சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பணியாற்றி மறைந்தவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். இலங்கையின் வடபுலம் பொதுவுடைமை இயக்கத்திற்கு ஆற்றல் மிக்க முன்னோடிகளைக் கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளிலே தந்திருக்கிறது. தோழர்கள் மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், பொன்.கந்தையா, நா.சண்முகதாசன், டாக்டர் சு.வே.சீனிவாசகம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
அவர்களது அடிச் சுவட்டில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர் கே.ஏ.சுப்பிரமணியம். அவரது அரசியல் வாழ்வும் மக்கள் மத்தியிலான கடுமையான அர்ப்பணிப்புடனான பணியும் உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பைப் பெற்றிருந்தது.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தனது இருபதாவது வயதிலே மார்க்கிச உலக நோக்கினால் ஈர்க்கப்பட்டவர். தான் வாழ்ந்த பழைமையும் ஏற்றத் தாழ்வும் மிக்கச் சமூக சூழலை நோக்கி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாக்சிசத்திலும் பொதுவுடைமை இயக்கத்திலும் விடைகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றுடன் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டவர். வெறுமனே மாக்சிசத்தை வரித்துக் கொண்டால் மட்டும் போதாது அதனைத் தீவிரமாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்கள் மத்திக்கு கொண்டு சென்று சமூக மாற்றப் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபெற்று நின்றவர் தோழர் மணியம்.
அதன் காரணமாக தோழர் மணியம் தனது இருபத்தியொராவது வயதில் 1951ம் ஆண்டில் அன்றைய பொதுவுடைமைக் கட்சியின் முழு நேர அரசியல் ஊழியராகிக் கொண்டார். அதன் மூலம் தொழிலாளர்கள், கிராமப்புற விவசாயிகள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் என்போர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக மாற்றம் கோரி நின்ற பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை முன்னெடுப்பதிலும் முக்கியமான செயற்பாட்டாளராகி ஏனையோருடன் இணைந்து முன்நிலை வகித்து செயற்பட்டும் வந்தார்.
அன்றைய கால கட்டத்தின் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்த சிங்கள தமிழ் முஸ்லீம் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க அரசியல் தொழிற் சங்க வேலைமுறைகளும் அவர்கள் கொண்டிருந்த ஆற்றல்கள் வாழ்க்கை முறைகள் அடுத்த தலைமுறையினரான பொதுவுடைமை வாதிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அதேவேளை சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் வேகமும் வளர்ச்சியும் பெரும் உந்துதலைக் கொடுத்து வந்தது. இவை யாவும் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் போன்ற அன்றைய இளம் பொதுவுடைமை வாதிகளுக்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்கின.
தாம் வரித்துக் கொண்ட பொதுவுடைமை கொள்கையை நடைமுறை வாழ்விலும் பின்பற்றுவதில் தோழர் மணியம் எப்பொழுதும் கவனத்துடன் இருந்து வந்தார். தான் விரும்பிய வாழ்க்கைத் துணைவியை மணம் முடிப்பதில் மிக உறுதியாக இருந்து தனது குடும்பமும் அதனைச் சூழ்ந்த பழைமைவாதத் தடைகளையும் எல்லைகளையும் உடைத்தெறிந்து நியாயமானவற்றுக்கான மீறல்களைச் செய்வதில் அன்றைய சூழலில் ஒரு பெறுமதி மிக்க முன்னுதாரணத்தைக் காண்பித்தார் என்பது இவ்வேளையில் நினைவு கூரத் தக்கதாகும்.
marx333தோழர் மணியம் வடபுலத்தின் இறுக்கமுடைய நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளின் மத்தியில் நின்று அவற்றுக்கு எதிரான மாக்சிச லெனினிசச் சிந்தனை அடிப்படையில் மக்களை குறிப்பாக தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்களை அணிதிரட்டுவதில் உறுதியுடன் முன்சென்றார். இவ்விடயத்தில் மாக்சிசத் தெளிவும் பொதுவுடைமை இயக்க நம்பிக்கையும் தளராத மனவுறுதியும் அவசியமானதாகும். பொதுவுடைமை வாதிகள் நான்கு சுவர்களுக்குள் இருந்தவாறே தத்துவம் பேசுபவர்களாக இருக்க முடியாது. மக்களது அன்றாட வாழ்வில் பங்கு கொண்டு அவர்கள் மத்தியில் வேலை செய்பவர்களாக இருக்கும் பொதுவுடைமை வாதிகளாக இருப்போரே வெற்றிகரமான தமது வேலை முறைகளுடன் முன்னேறிச் செல்பவர்களாக இருப்பர்.
அந்த வகையில் தோழர் மணியம் மக்களை நாடிச் செல்பவராகவும் அவர்கள் மத்தியிலான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் விடுபடுவதற்கான அணிதிரட்டல் அமைப்பாக்குதல் போராட்டங்களை முன்னெடுத்தல் என்பனவற்றில் வழிகாட்டும் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவராக அவர் விளங்கினார். அத்தகைய அனுபவத்தின் வாயிலாகவே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான சாதிய தீண்டாமைக்கு எதிரான பரந்த வெகுஜனப் போராட்டங்களின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கினார்.
1966 – 1971 வரையான காலப் பகுதியில் இடம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களை தோழர் நா.சண்முகதாசன் தலைமையிலான மாக்சிச லெனினிசப் பொதுவுடைமைக் கட்சியே முன்னெடுத்து நின்றது. கட்சியின் கூட்டுத்தமைமையின் வழிகாட்டலில் இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க அப்போராட்டங்களில் தோழர் மணியத்தின் ஆற்றல் மிக்க தலைமைத்துவப் பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கதாகும்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் எத்தகைய வெகுஜனப் போராட்டங்களிலும் தொழிற் சங்கப் போராட்டங்களிலும் மக்களோடும் தொழிலாளர்களோடும் இணைந்து முன்னணியில் நிற்பவர். அடக்குமுறை ஆட்சியினர் விதிக்கும் தடைகளை மீறி வெகுஜன ஊர்வலங்களையும் வேலை நிறுத்தங்களையும் கட்சித் தலைமை முன்னெடுக்கும் போதெல்லாம் தோழர் மணியம் முன்னின்று தலைமை தாங்கி நம்பிக்கை தரும் வகையில் தலைமைத்துவப் பாத்திரம் வகிப்பது அவரது புரட்சிகர இயல்பாகும். அதனால் பலதடவைகள் மோசமான பொலீஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகிப் படுகாயங்கள் பெற்ற தழும்புகள் அவர் உடலில் காணப்படும். அவற்றைப் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட நோய்கள் பற்றியும் பேச்சுக்கள் எழும் சந்தர்ப்பங்களில் “மக்களுக்காக வாங்கிய பொலீஸ் அடிகள் பெரிதல்ல. ஏனெனில் எத்தனையோ பொதுவுடைமை வாதிகள் போராட்டங்களில் தமது இன்னுயிர்களை ஆயிரமாயிரமாய் அர்ப்பணித்திருப்பதோடு ஒப்பிட்டால் இது ஒரு சிறிய விடயம்”. எனத் தன்னடக்கத்துடன் கூறிக்கொள்வார்.
ஒவ்வொரு பொதுவுடைமை வாதியும் தமது கொள்கை நிலைப்பட்ட செயற்பாடுகளாலும் வாழ்வு முறையாலும் எதிர்காலத்திற்குரிய வீரியம் மிக்க பொதுவுடைமை வாதிகளை உருவாக்கிச் செல்கிறார்கள் என்பது உலகம் தழுவிய பொது நிலையாகும். அந்தவகையில் தோழர் மணியம் தனக்கு பின்பும் இந்நாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் உரியதான ஒரு மாக்சிச லெனிசிசக் கட்சி தொடர்ந்து சக்திபெற்று தனது வரலாற்றுக் கடமையினை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகக் கடும் நோய் கண்ட நிலையிலும் செயலாற்றிச் சென்றார். அதுவே புதிய ஜனநாயகக் கட்சியாக வளர்ச்சி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர் மணியம் பதினொரு ஆண்டுகள் புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து மறைந்தார். அவர் பழைய தலைமுறையைச் சேர்ந்த பொதுவுடைமை வாதிகளையும் புதிய தலைமுறைப் பொதுவுடைமைவாதிகளையும் இணைத்து செயல்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார். அதன் மூலம் இலங்கையில் பாராளுமன்றச் சீரழிவுக்கு உள்ளாகி நின்ற பொதுவுடைமை இயக்கத்திலிருந்து புரட்சிகர சக்திகளை அணிதிரட்டி முன்செல்வதில் முன்னின்ற தோழர் நா.சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் முன்னணித் தலைமைத்துவத் தோழர்களில் தோழர் மணியம் முக்கியமானவராகவும் திகழ்ந்தார். அதன் ஊடாகப் புரட்சிகரப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடர்ச்சிக்கு வழிகாட்டியும் சென்றார்.
ஒருவர் தனது இளவயதின் ஆர்வ மிகுதியால் பொதுவுடைமைவாதியாகிக் கொள்ளலாம். ஆனால் பொதுவுடைமை இலட்சியத்தை விடாப்பிடியாகப் பற்றி நிற்பதற்கு இன்றைய சமூகச் சூழல் விதிக்கும் பல்வேறு விதத் தடைகளையும் தான்டிச் செல்லும் மாக்சிச லெனினிச வாதிகளுக்குரிய ஆளுமையைப் பெற்றே ஆக வேண்டும். அதனாலேயே தோழர் மாஓசேதுங் “ஒரு பொதுவுடைமைவாதி என்பவர் ஒரு பரீட்சையில் சித்தியடைந்தவுடன் அதில் திருப்திப்பட்டு அதற்கு அப்பால் செல்லாது நின்றுவிடக் கூடாது. தொடர்ந்தும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பரீட்சையிலும் சித்தி பெறும் ஒருவரே உண்மையான பொதுவுடைமைவாதிகளாகிக் கொள்ளமுடியும்” என்றார்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தனது நாற்பது வருடகால பொதுவுடைமை அரசியல் வாழ்வில் பல்வேறு நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் கொலை முயற்சிகளின் மத்தியில் தொடர்ந்து வந்த சோதனைகளில் சித்திகள் பெற்றே வந்தார். அதுவே நம் எல்லோருக்கும் பலம் தரும் முன்னுதாரணமாகவும். அமைந்து கொண்டது. தோழர் மணியத்தின் அர்ப்பணிப்பும் தியாகமும் நிறைந்த வாழ்வின் முன்னுதாரணம் நமக்கெல்லாம் தொடர்ந்து வழிகாட்டும் என்பதை அவரது 20வது வருட நினைவின் போது உணர்ந்து முன் செல்வோமாக.

கருத்துக்கள்

Sharangan Posted on 11/27/2009 at 1:11 pm

பொதுவுடமைத்தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் நினைவுக்கூட்டம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள். தோழருக்கு புரட்ச்சிகர வணக்கமும் அஞ்சலியும்.

Ashokyogan Posted on 11/27/2009 at 8:55 pm

1983களில் சுழிபுரத்தில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களோடு நான் கொண்டிருந்த உறவின் இனிய தருணங்கள் என் நினைவில் எழுகின்றன. தோழருக்கு நான் சார்ந்திருந்த விடுதலை அமைப்பின் மீது விமர்சனங்கள் இருந்தன. இந்த விமர்சனங்களின் பெறுமதி மிக்க உண்மைகளை உணரநேர்கையில் எமது அமைப்பு எமது கையைவிட்டு எங்கோ நழுவிப்போய்யிருந்தது. இவையெல்லாம் காலங்கடந்த நினைவுகளாய் இன்றும் என் நெஞ்சில்.
தோழருக்கு என் புரட்சிகர வணக்கங்களும் அஞ்சலியும்.
வருடா வருடம் தோழரின் நினைவினைக்கூறும் தோழர்களுக்கு நன்றிகள்.
தோழரின் துணைவியார் வள்ளியம்மை அவர்களின் இணையவலைத் தளத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. 71வயதிலும் அம்மாவின் துடிப்பான செயற்பாடும் சமூக அக்கறையும் என்னை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. அம்மாவின் 71வது வயது எமக்கெல்லாம்வரும் போது நாமெல்லாம் என்ன செய்துகொண்டிருப்போமோ தெரியவில்லை. பொதுவுடமை தத்துவத்தை வாழ்க்கையின் உயிராக நேசித்த ஒரு தோழரின் துணைவியார் வேறு எங்ஙனம் வாழ்தல் சாத்தியம்?


"இனியொரு" இல் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்..

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF