வவுனியா ஆசிரியர் ‘ரணேஸ்’ என்ற ஈர நெஞ்சினன், நாகைஒளி விளக்காய் வழிகாட்டும் தீபமானாய்....!
--------------------------------------------------------
வவுனியாப் பூந்தோட்டக் கல்வியியற் கல்லூரியில்
பவுத்திரமான ஆசிரியப் பயிற்சிபெறுங் காலத்தில்
கீழ்ப்படிவும் நன்றியுடன் சேர்ந்த செயற்பாடும்....
சூழ்ந்திருந்த மாணவ மணிகளுள்ளே தலைசிறந்த
தாழ்ப்பாளில்லாத் திறந்தமனத் தன்னிரக்கம் கொண்டவராம்
காழ்ப்புணர்ச்சி இல்லாத கர்மவீரன் ' ரணேஸ்’ என்போம்
ஊசிமுனைத் தராசுபோல உண்மைக்கு உருவளித்து
ஆசிரியப் பணிக்காக அல்லும்பகல் முயன்றுநின்றார்.
சாகும்வயது மல்ல;சாக்காடு போகும்வயது மல்ல;
வேகும்மனதுடன் உன்சக ஆசிரியர் மாணவர்கள்
தொழுதழுது புலம்புகிற துணையாளின் மதலைகளின்
அழுகையொலி கேட்கிறதே அன்பார்ந்த உறவுகளாம்
பெற்றவரும் பிறந்தவரும் உகுக்கின்றார் கண்ணீராய்.....
‘பிரிவென்ற’ மரணமது பிரித்ததோ ‘ரணேஸ்’ என்று.......
நாளைக்குச் சுகப்பட்டு வீடுவரும் நம்பிக்கையில்....
ஏழைந்து வயதினிலே எல்லோரையும் கைவிட்டாய்!
உயரதிபர் பதவியது உன்னருகில் நெருங்கையிலே-மிக
உயரத்தில் சென்றுவிட்டாய் உறவுகளை விட்டுவிட்டு
சமுதாய அக்கறையும் சமூகநலன் விழிப்புணர்வும்
அமுதான சேவைசெய்த ஆசிரிய மணியிவனே...மக்கள்
கழகத்தின் உயர்வினிலே கண்ணியம் காத்துநின்றாய்...
உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணை வழிசொன்னாய்
பழகுதற்கு இனியவனே நற்பண்பான இயல்பினனே....
அழுதாற்ற முடியாது ஆறாதெம் மனத்துயரம்!
நீவாழ்ந்திருந்த காலத்தில் வாடாமலர்ப் புன்சிரிப்பும்
ஈகைநிகழ்வும் விருந்தோம்பும் பாங்குகள் நிறைந்த
வாகைமரநிழல் அடைகின்ற வாயில்லாச் சீவன்கட்கு...
நாகைஒளி விளக்காய் வழிகாட்டும் தீபமானாய்....!
சொற்பவய துள்ளேநீ சுடரொளியாய் மிளிர்ந்ததனை
அற்புதம் என்போமோ ஆறாது எம்மனது...
ரணமாகி இதயமெலாம் நொந்து வலிக்குதய்யா!
‘ரணேஸ்’ என்றஈர நெஞ்சினனை எண்ணுதய்யா!
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்