Sunday, October 3, 2010

மரண அறிவித்தல் : அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.

மரண அறிவித்தல் :  அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.

*என்னருகே நீ இருந்தால்........! வள்ளியம்மை சுப்பிரமணியம்

*என்னருகே நீ இருந்தால்........!
--------------------------------------------
தாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.
    தாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....!
வாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்
    ஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்
நோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........!
     சாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்
தோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்
     தேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.
 
காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்
    சூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்
பேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......
    நீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....
பாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...
   சீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....
வேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்
வேராக நீயிருந்து வீரம் தந்தாய்! 
 
அந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்
  குன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்
என்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...
   என்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...?
உன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான
   பொன்மொழிகள்,கவிதைகள், போற்றும் தியானங்கள்....
என்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....
    என்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே!
 
*இம் மாதம் 13-09-2010   திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை
2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு
ஊற்றாகியது. சிங்கப்பூர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.

நான் ஓய்வெடுத்தால், வேகமாகச் சரிந்துவிடுவேன்: மதியுரை அமைச்சர்லீ குவான் இயூ

“சரி, எப்போது கடைசி இலை விழப் போகிறது?” என்று கேட்டார் சிங்கப்பூரைத் தனது சொந்தக் கண்டிப்பான, உணர்ச்சிவச மற்ற பாணியில் உருவாக்கிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ.
“உரமும் தெம்பும் படிப்படியாகக் குன்று வதை என்னால் உணரமுடிகிறது” என்றார் 87வது பிறந்தநாளை நெருங்கிக் கொண் டிருக்கும் திரு லீ.
இவரது “சிங்கப்பூர் பாணி” பொருளியல் வளர்ச்சியும் கண்டிப்பான சமூகக் கட்டுப் பாடும், ஆசிய வட்டாரத்தின் மிகவும் செல் வாக்குமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவ ரென இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.
“பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், முந்திய ஆண்டிலிருந்த அதே நிலை இப்போது இல்லையென்ற உணர்வு எழுவதைப் பற்றிச் சொல்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கை” என்றார் அவர்.
சென்ற வாரம் அளித்த நீண்டநேரப் பேட்டியில், வயோதிகத்தின் வலிகளும் வேதனைகளும், தியானத்தில் கிடைக்கும் மனநிம்மதி, வளம் குன்றிய தீவைச் செழிப் பான நாடாக உருவாக்க நடத்திய போராட் டம், அடுத்த தலைமுறையினர் தனது சாதனைகளை மெத்தனமாகக் கருதி, அவற்றைக் கைநழுவிச் செல்ல விட்டுவிடு வார்களோ என்ற அக்கறை ஆகியவை பற்றி திரு லீ பேசினார்.
தனது அலுவலகத்தில் பேட்டியளித்த திரு லீயின் தோற்றத்தில் வயோதிகம் வெளிப்பட்டபோதிலும், அவரது சிந்தனை யாற்றல் கூர்மையாகவே இருந்தது.
ஆனால், 61 ஆண்டுகளாகத் தனக்கு துணை நிற்கும் தனது மனைவி, அடுத் தடுத்து தாக்கிய வாதங்களால் படுத்த படுக்கையாகி, வாய்ப்பேச முடியாமல் நோயுற்றிருப்பதால் தனது வாழ்க்கையே இருண்டுவிட்டதாக அவர் சொன்னார்.
“நான் சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருக்க முயல்கிறேன். ஆனால், இடையிடையில் நாங்கள் சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைக்கத் தொடங்கிவிடுவேன்” என்றார் திரு லீ.
“எனக்கு நானே எவ்வாறு ஆறுதலளிப் பது? வாழ்க்கை இப்படித்தான் எனக்கு சொல்லிக் கொள்வேன்” என்றார் அவர்.
“அடுத்தது என்னவென்பது எனக்குத் தெரியாது. யாரும் திரும்பி வந்ததில்லை” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் 1965ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டது முதல் 1990 வரை பிரதம ராகப் பொறுப்பாற்றிய திரு லீ, அவரது வார்த்தை களில் “மூன்றாம் உலக வட்டாரத்தில் முதலாம் உலகப் பசுந்திடலை” உருவாக் கினார்.
செயல்திறனுக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் பாராட்டு பெற்ற திரு லீ, அரசியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அவதூறு வழக்குகளின் மூலம் எதிரிகளை அச்சுறுத்தியதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டின.
இப்போது மதியுரை அமைச்சராகப் பங்காற்றும் திரு லீ, தனது மகன் பிரதமர் லீ சியன் லூங் வழிநடத்தும் அரசாங்கத்தில் சக்திமிக்க அங்கத்தினராக நீடிக்கிறார்.
அவருக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ஆட்சிமுறை எவ்வளவு காலம் நீடித்து நிலைக்கும் என்பதே சிங்கப்பூரில் தற்போது நிலவும் கேள்வி.
எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் திரு லீ, நீச்சல், சைக்கிளோட்டம், தசைப்பிடிப்பு போன்றவற்றின் துணையுடனும், சிங்கப்பூரி லும் வெளிநாட்டிலும் அன்றாடக் கூட்டங்கள், உரைகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கெடுத்தும் வயோதிகத்தை எதிர்த்து வருகிறார்.
“நான் ஔய்வெடுத்தால், வேகமாகச் சரிந்து விடுவேன்” என்றார் அவர்.
“நான் 87 வயதை நெருங்குகிறேன். உடற் கட்டுடன் இருக்கவும், சுறுசுறுப்பாகத் தோன்ற வும் முயற்சி செய்கிறேன். இது பெரும் முயற்சி, ஆனால் இந்த முயற்சி தேவைதானா?” என்று கேட்டார் திரு லீ.
“துணிச்சலான வெளித்தோற்றத்துடன் திகழ என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்வேன். இது எனக்குப் பழக்கமாகி விட்டது. நான் எப்படியோ தொடர்ந்து இயங்குகிறேன்” என்று குறிப்பிட்டார் திரு லீ.
ஒவ்வொரு நாள் முடிவிலும் தனது மிகவும் வருத்தமான தருணத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார். ஈராண்டுகளுக்கும் மே லாக நடமாடவோ பேசவோ முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனது 89 வயது மனைவி குவா கியோக் ச்சூவின் படுக்கை அருகில் அவர் அமர்ந்திருக்கும் தருணம் அது.
லண்டனில் இருவரும் சட்டக்கல்லூரி மாணவர்களாகப் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து, திரு லீக்குப் பக்க பலமாகவும் ஆலொசகராகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்து வந்தவர் திருமதி லீ.
“நான் அவரிடம் பேசுவது அவருக்குப் புரிகிறது. ஒவ்வொரு நாள் இரவும் அவரிடம் பேசுவேன். எனக்காக அவர் தூங்காமல் காத்திருப்பார்; அன்றைய எனது அலுவல் களைப் பற்றி அவரிடம் சொல்வேன், அவருக்குப் பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டு வேன்” என்றார் திரு லீ.
ஒரு பெரிய தாளை எடுத்து, தனது வாசிப்புப் பட்டியலைக் காட்டினார் திரு லீ. ஜேன் ஆஸ்டின், ருட்யார்ட் கிப்லிங், லூயிஸ் கேரல் எழுதிய நூல்களையும் ஷேக்ஸ்பியரின் வரிகளையும் அவர் வாசிப்பார்.
அண்மையில், கிறிஸ்துவத் திருமண உறுதிமொழிகளைப் படித்துப்பார்த்தபோது, சில வரிகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொன் னார். “நோயிலும் ஆரோக்கியத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும்வரை நேசித்து, துணையிருந்து, பேணிக் காப்பேன்” என்பது அவ்வாசகம்.
“என்னால் முடிந்தவரை உனக்குத் துணையிருக்க முயல்வேன்” என்று அவரிடம் சொன்னேன். இதுதான் வாழ்க்கை.
அவரும் புரிந்துகொண்டார்” என்றார் திரு லீ. ஆனால், “முதலில் போகப் போவது யார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரவில், மனைவி படும் வேதனையின் ஒலி பக்கத்து அறையிலிருந்து கேட்கும்போது, கிறிஸ்துவ நண்பர் சொல்லித்தந்த மந்திர த்தை உச்சரித்து 20 நிமிடங்கள் தியானம் செய்வார்: “மா-ரா-நா-தா”.
“என்னிடம் வா, ஏசுநாதரே” என்பது இதன் அர்த்தம் என்று கேள்விப்பட்டதாகச் சொன் னார் திரு லீ. இறை நம்பிக்கை இல்லா விட்டாலும், மந்திரத்தின் ஔசை அவருக்குச் சாந்தமளிக்கிறது.
“குரங்கைப் போன்ற எண்ணம் அங்கு மிங்கும் அலைபாயாமல் தடுத்து வைத்திருப்பதுதான் பிரச்னை” என்றார் அவர்.
“ஒருவகை சாந்தம் மனதில் குடிகொள்ளும். அன்றாட நெருக்குதல்களும் கவலைகளும் நீங்கும். அதன்பிறகு பிரச்சினையின்றி தூக்கம் வரும்” என்றார் திரு லீ.
மனைவியின் நோய் இடைவிடாத உளைச்சல் தருவதாகச் சொன்னார் திரு லீ. இத்தனை ஆண்டுகள் அரசியலில் எதிர்நோக்கிய உளைச்சல்களைவிட இதுவே அவருக்கு அதிக சிரமமாக இருக்கிறது.
தனது வாழ்க்கையை நினைவுகூர்கையில், 1965ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது, பகிரங்கமாகக் கண்கலங்கிய தருணத்தை அவர் பலமுறை குறிப்பிட்டார்.
அந்தச் சோதனைக்காலம் ஏற்படுத்திய சவாலே அவரது வாழ்க்கையை நிர்ணயித் தது. நிலையான, செழிப்பான நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. சீனர், மலாய்க்காரர், இந்தியர் உள்ளடங்கிய மக்களிடையில் பூசல் நேராமல் காக்கச் செய்தது.
“ஒரு நாட்டுக்குரிய அடிப்படை அம்சங் கள் எங்களிடம் இல்லை. அதாவது ஔரின மக்கள், பொதுவான மொழி, பொதுவான கலாசாரம், பொதுவான வருங்காலம் போன்றவை” என்று இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் பத்திரிகைக்கு மூன் றாண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.
நவீன சிங்கப்பூரில் பாதுகாப்பான நல்வாழ்வை அனுபவிக்கும் இளையர்கள், மேலும் வெளிப்படையான அரசியலும் சுதந்திரக் கருத்துப் பரிமாற்றமும் கோருவது இவருக்குக் கவலையளிக்கிறது.
“இது இயற்கையாக ஏற்பட்ட சூழ்நிலை என்றும், இதில் உரிமையெடுக்கலாம் என் றும் அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர். தானியக்க முறையில் இதை இயக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது என்றுமே உண்மை யல்ல என்பது எனக்குத் தெரியும்” என்றார் திரு லீ.
அவர்கள் கேட்கும் வெளிப்படையான அரசியல் போராட்டம் கண்டிப்பாக இனச் சார்பு அரசியலுக்கு இட்டுச் செல்லும். இதனால் “நமது சமூகத்தில் பிரிவினை ஏற்படும்” என்று திரு லீ சுட்டிக்காட்டினார்.
திரு லீ தனது எதிரிகள்மீது பல அவதூறு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.
ஆனால், தனது நற்பெயரைக் காக்க இந்த வழக்குகள் அவசியம் என்று அவர் கூறினார். சிங்கப்பூருக்கு “வந்து செல்லும்” மேற்கத்திய செய்தியாளர்கள் கூறும் குறைகள் “முற்றிலும் குப்பை” என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், இந்தச் செய்தி யாளர்களோ அல்லது அவர்கள் எழுதும் இரங்கல் செய்திகளோ தனது செயல்களுக் கான இறுதித் தீர்ப்பாக அமையப் போவதில்லை என்றும், அவற்றை ஆராயும் வருங்காலக் கல்விமான்களே இறுதித் தீர்ப்பளிப்பார்கள் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
“நான் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால், நான் செய்த எல்லாமே மேன்மையான நோக்கம் கொண்டவை. சில விரும்பத்தகாத செயல்களையும் நான் செய்திருக்கிறேன், வழக்கு விசாரணையின்றி சிலரை அடைத்திருக்கிறேன்” என்றார் அவர்.
மரத்தின் இலைகள் விழத் தொடங்கியிருந்தாலும், லீ குவான் இயூ கதை இன்னும் முடிந்துவிடவில்லை என்று திரு லீ குறிப்பிட்டார்.
“ஒருவரின் சவப்பெட்டி மூடப்படும்வரை அவரை மதிப்பிடாதீர்கள்” என்ற சீனப் பழமொழியைக் கூறினார் திரு லீ.
“சவப்பெட்டியை மூடிவிட்டு, பிறகு தீர்மானம் செய்யுங்கள். அதன்பிறகு அவரை மதிப்பிடுங்கள். பெட்டி என்னை மூடுவதற்குள் நான் ஏதேனும் முட்டாள்தனமாகச் செய்துவிடலாம் என்றார் திரு லீ.
-

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF