Sunday, November 20, 2011

மணியம் ஒரு மானிட அரும் பூ. -வள்ளியம்மை சுப்பிரமணியம்

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 22 வருடங்கள் (அமரர் 27 கார்த்திகை 1989) ,.......... 

  மலர்வு:----05-03-1931                                                   உதிர்வு:----27-11-1989
  
மணியம் ஒரு மானிட அரும் பூ....
--------------------------------------------------------------------------
தஞ்சை இளவரசியின் குதிரைமுகம் மாறிய மாவிட்டபுரத்தில் பிறப்பூ
பிஞ்சு வயதில் தமக்கையார் குடுப்பத்துக் கொழும்பில் வளர்ப்பூ
சென் - ஹென்றீஸ் கல்லூரியின் மாணவனாக ஆங்கிலப் படிப்பூ
தன்னுடன் படிக்கும் ந்ண்பன் கோவிலுக்குள் வரத்தயங்கிடத் தவிப்பூ

காங்கேயன் - சீமெந்து ஆலையில் பொறியியல் பயிலுநராய் நியமிப்பூ
அங்குள்ள உணவகத்தில் குறிப்பிட்ட சாதியினரைத் தள்ளியதால் பதைப்பூ.
மேட்டுக்குடி மக்களுக்கு மாத்திரமே கதவுகள் திறப்பதால் பக்தியில் வெறுப்பூ
ஆட்டிப் படைக்கும் மதசம்பிரதாயம் மனிதனுக்கு அவசிய மில்லையெனத் துறப்பூ.

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ
நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ
ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ
ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ.

ஆட்சியினர் எலும்புகளை அடித்து நொருக்கினாலும் முகத்திலே ஒரு சிரிப்பூ
வீழ்ச்சி ஒருபோதும் மானிடத்தை ஒடுக்காதென்பதில் தொடர்ந்த -உழைப்பூ.
மாற்றியக்கத் தோழர்களும்    நாட்டுநலன் கொண்டால் கைகோர்க்க முனைப்பூ
நாற்றிசையும் ஐக்கியத்தை வலுப்படுத்த நாவசைக்கும் மனிதப் பண்பூ.

மணவாழ்வில் மறுக்காது தன்னுடன் வழிநடப்பாள் என்ற அன்பூ
இணக்கமான இருதயம் இருப்பது கண்டு உறுதியான மண முடிப்பூ.
கற்கைநெறி மானிட விழுமியத்தை நேசிக்கத் தொடர் வகுப்பூ.
முற்போக்குச் சக்திகளுடன் சகலரையும் இணைப்பதில் ஒத்துழைப்பூ.

 “தாயகம்” இலக்கிய இதழை ஆரம்பித்து ஆயுள்பரியந்தம் தலையங்க வடிப்பூ
தகாத செயல்கண்டு விட்டால் தட்டிக்கேட்டு விசாரிக்கும் கண்டிப்பூ.
கருத்தரங்கம்,நூல் வெளியீடு,பத்திரிகை வளர்ச்சி கண்டு பூரிப்பூ.
விரும்பாத வீணர்போல் சோறுண்டு மரணிக்க விரும்பாத அரும் பூ.
                                                                                                          --------------.
                                                                                                             வள்ளியம்மை சுப்பிரமணியம்


1 comment:

 1. அப்பா!
  நீங்கள் எங்களுடன் இல்லாமல் போய் இருபத்தி ஒரு வருடங்கள் ஆகிவிட்டன. இப் பிரிவு மிக நீண்ட தடுமாற்றத்துடன் வாழ்வை தொடர்ந்தது. பல அரசியல் மாற்றங்கள், இடபெயர்வுகள் , புதிய உறவுகள் ... என சொல்ல பல செய்திகள் உண்டு.
  உங்கள் ஆரம்ப கால வாழ்வு பற்றி நீங்களும், அம்மாவும் சொல்லி கேட்டதுண்டு. ஆனால் இப்பவும் எனக்கு , நானும் நீங்களும் "துலாபாரம் " படம் பார்த்துவிட்டு நான் அழுது கொண்டு சைக்கிள் இல் பயந்து வந்த இரவு தான் ஞாபகம் வரும். உங்களை சுவர் பக்கம் படுக்க வைத்து , நான் கட்டில் ஓரம் படுக்க ஆரம்பித்தேன். அன்று ஆரம்பித்த பயம் பின்னர் வேறு, வேறு வடிவில் பெரிதாகிப் போனது. உங்கள் போராட்ட காலங்களில் பொலிசாரின் தேடுதல்கள், பின்னர் அண்ணாவின் போராட்ட காலத்தால் ஆர்மி தேடுதல் ,அப்புறம் புலிகள்ளால் தேடுதல் என்று , உங்கள் மரணம் வரை உங்களை பாதுகாப்பதே என்னளவில் போராட்டமாகிப் போனது.
  நேர்மை , போராட்டம், வறுமை இவற்றுடன் "மனிதம் உள்ள மணியம் " ஆக வாழ்வை வாழ்ந்தீர்கள். சாதீய அடக்குமுறை உள்ள குடும்பத்தில் பிறந்து , அதற்கு எதிராக நடைமுறை வாழ்வை அமைத்து வாழ்ந்து காட்டினீர்கள். இழப்பதற்கு ஏதுமற்ற சிக்கனமான , தூய்மையான வாழ்வு உங்களுடையது.சமூக அடக்கு முறைக்கும், சர்வாதிகாரத்துக்கும் எதிராக பயமின்றி குரல் கொடுத்தீர்கள்.உங்கள் வீரமிகு வாழ்வு இன்றும் பல தோழர்களின் வாழ்வாக வாழ்கிறது .
  அரசியல் எதிரியுடனும் நட்பு தொடர்ந்த உங்கள் அரசியல் நாகரீகம் பெருமையானது. அவர்கள் அடைக்கலம் கேட்டபோது அனைத்துகொண்டதும், உங்களுக்கு அவர்கள் அடைக்கலம் தந்ததும் நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வின் பெருமை. இறுதி நாட்கள் உங்கள் குடும்பத்தையும் ,தோழர்களையும், வாழ்ந்த மண்ணையும் விட்டு அரசியல் நாகரீகம் ,நேர்மை அற்றவர்களால் பிரிக்கபடீர்கள்.
  மரணத்தில் கூட மதசடங்கும், மூடனம்பிகையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தீர்கள். அப்பா!
  உங்களிடம் காட்டுவதற்கும், சொல்வதற்கும் ஆயிரம் செய்திகள் உண்டு. நடைமுறையில் நீங்கள் விரும்பியபடி நாம் வாழ்வது தான் அதற்கான பதில். நிச்சயமாக வாழ முயற்சிக்கிறேன் . ஒரு நேர்மை மிகு போராளியின் மகளாக ,உங்களுடன் வாழ்ந்த நாட்கள் , என் குழந்தைகளின் வாழ்வுக்கு ஒரு வழிகாட்டுதல். பிரிவின் ரணம் மாறாத போதும் ,உங்களுக்கான எம் வாழ்வு தொடர முடியவில்லை. கருத்து சுதந்திரமற்று , சர்வாதிகார சூழலில் இருந்து விடுபட்டு, நாடு மாறி வந்து விட்டேன் . மீண்டும் என் நாட்டுக்கு போகிறேன். அங்கு நீங்கள் இல்லை. நான் நேசித்த பல விசயங்கள் காலத்தின் மாற்றத்தால் குழம்பி போய் இருக்கிறது. இருந்தும் போகிறேன். உங்களுக்கான என் நாட்களை தொடர்வேன் என்ற நம்பிக்கை யுடன்....

  - அன்பு மகள் பபி

  ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF